இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது, தமிழகத்தைச் சேர்ந்த இரா. நடராஜன் மற்றும் ஆர். அபிலாஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சாகித்ய அகாதமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளை உருவாக்கியவர்களுக்காக வழங்கப்படும் பால சாகித்ய அகாதமி விருதுக்கு, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழில், விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற படைப்பை எழுதிய இரா. நடராஜனுக்கு பால சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது.
இதுகுறித்து எழுத்தாளர் இரா. நடராசன் பேசும்போது, ‘கடந்த 20 ஆண்டுகளாக தமிழில் குழந்தை இலக்கியத்தில் இயங்கிவருகிறேன். 62 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இந்த விருதை குழந்தை இலக்கியத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். என்னுடைய அனைத்து குழந்தை வாசகர்களுக்கும் இந்த விருதை கண்ணீருடன் சமர்பிக்கிறேன். என்னுடைய பூஜ்ஜியமாம் ஆண்டு புத்தகம் பிரெய்லியில் வெளியானபோது பார்வையற்ற மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுரையில் வாசகர் கூட்டத்தை நடத்தினார்கள். என்னுடைய குழந்தை வாசகர்கள் என் படைப்புகள் குறித்து கடிதங்கள் எழுதுகிறார்கள். விருதுகளைப் போலவே இதுபோன்ற வாசகர்களின் அங்கீகாரத்தை நான் பெரிதாக மதிக்கிறேன்.’’ என்றார். இரா.நடராசன் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்.


இவருடைய சமீபத்திய படைப்பு ரஃப் நோட் குழந்தைகளுக்கான நாவல், பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. அடுத்து டார்வின் ஸ்கூல் என்கிற அறிவியல் புனைவை எழுதிக்கொண்டிருக்கிறார்.
இதேபோல், சாகித்ய அகாதமியின் சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதுக்கு, 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் ஆர்.அபிலாஷும் இடம்பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறது கால்கள் நாவல். உயிர்மை பதிப்பகம் இந்நாவலை 2012ல் வெளியிட்டது. விருது பற்றி ஆர். அபிலாஷ் பேசும்போது, ‘இளம்படைப்பாளிகள் வெகுஜென கவனம் பெற இதுபோன்ற விருதுகள் உதவும்’ என்று தெரிவித்தார். ஆர். அபிலாஷ் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு பட்ட மாணவர். நாவலோடு கவிதை, கட்டுரைகள் என பல தளங்களில் எழுதிவருகிறார்.
இவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சாகித்ய அகாதமி தெரிவித்துள்ளது.