மக்கள் நலப் பணியாளர்களுக்காக அதன் பெயரிலோ அல்லது மது ஒழிப்பு பிரசாரம் என்ற பெயரிலோ பதவியை உருவாக்குவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும். இது சாத்தியமில்லை என்றால் காலிப் பணியிடங்கள் உள்ள அரசுப் பள்ளிகள், கிராம பஞ்சாயத்துகள், நகரப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், கிராம அலுவலர்கள், தாலுகா அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் உள்பட தமிழக அரசின் கீழ் செயல்படக் கூடிய துறைகளில் நியமனம் செய்ய வேண்டும். அல்லது 2014- 15-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்களில் சில பதவிகளை உருவாக்கி அதில் அவர்களின் தகுதி அடிப்படையில் வயது வரம்பை கணக்கில் கொள்ளாமல் பணியமர்த்த வேண்டும்.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்தத் தேதிக்குள் பணி நியமனம் செய்யப்பட முடியாதவர்களுக்கு பணி நியமனம் செய்யப்படும் வரை கடந்த ஜனவரி முதல் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது, கடந்த 1989-ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேரை, பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, பணிக்குத் தேவையில்லை என்று கூறி 2011-ஆம் ஆண்டு நீக்கியது.
அதை எதிர்த்து பணியாளர் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், நீக்கப்பட்ட பணியாளர்களைப் பணியில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தது.
அதை விசாரித்த நீதிமன்றம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஐந்து மாத சம்பளத்தை வழங்கி அவர்களைப் பணியில் இருந்து தமிழக அரசு விடுவிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவை எதிர்த்து திண்டுக்கல் மக்கள் நலப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, இந்த விவகாரம் தொடர்பாக பணியாளர்கள் சங்கங்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தொடர வேண்டும். அதை ஆறு மாதங்களுக்குள் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும், மக்கள் நலப் பணியாளர்கள் சங்கமும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணையின் போது, மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மக்கள் நலப் பணியாளர்கள் பணி உருவாக்கப்பட்டது என்று வாதாடினார். அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்படாமல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், அரசுப் பணி நியமனத்தில் உள்ள ஒதுக்கீட்டு முறைகளும் அதில் பின்பற்றப்படவில்லை. அதனால், நியமனம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து அந்தப் பணியில் இருக்க உரிமை இல்லை என்று வாதாடினார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு, மக்கள் நலப் பணியாளர்களுக்காக அதன் பெயரிலோ அல்லது மது ஒழிப்பு பிரசாரம் என்ற பெயரிலோ பதவியை உருவாக்குவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும். இது சாத்தியமில்லை என்றால் காலிப் பணியிடங்கள் உள்ள அரசுப் பள்ளிகள், கிராம பஞ்சாயத்துகள், நகரப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், கிராம அலுவலர்கள், தாலுகா அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் உள்பட தமிழக அரசின் கீழ் செயல்படக் கூடிய துறைகளில் நியமனம் செய்ய வேண்டும். அல்லது 2014- 15-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்களில் சில பதவிகளை உருவாக்கி அதில் அவர்களின் தகுதி அடிப்படையில் வயது வரம்பை கணக்கில் கொள்ளாமல் பணியமர்த்த வேண்டும்.
இந்த உத்தரவை உடனடியாகத் தொடங்கி அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த கால அவகாசத்துக்குள் மக்கள் நலப் பணியாளர்கள் யாரையாவது பணியமர்த்த முடியவில்லையெனில், இறுதியாக அவர்கள் பணியிலிருக்கும் போது பெற்ற ஊதியத்தை கடந்த ஜனவரி முதல் அவர்கள் பணியமர்த்தப்படும் வரை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.