ஈராக்கில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் வெளியிடப்பட்ட பிரசார வீடியோ, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வலைதளங்களில் வெளியானது குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த பிரசார வீடியோ, ஆங்கிலம், ஹிந்தி, உருது, தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் நோக்கில் இந்த வீடியோ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவரை மையமாக வைத்து இந்த வீடியோ படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயுதமேந்திப் போராடும் உணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதால், இந்த வீடியோவைத் தடை செய்யவேண்டும் என்று வலைத்தள அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும், தமிழ் மொழிபெயர்ப்பு எங்கு, யாரால் செய்யப்பட்டது என்பது குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முத்திரை பதித்த டி-சர்ட்டுகளை அணிந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் பலரை போலீசார் கண்காணித்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினை தமிழகத்தில் இருக்கும் எந்த பிரிவினரும் ஆதரிக்கவில்லை என்று இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.