நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா மீது மக்களவையில் இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா-2014 என்ற புதிய மசோதாவும், அதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சட்டத்திருத்த மசோதாவும் திங்கள் கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். இதையடுத்து, இந்த மசோதா மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நீதிபதிகள் நியமன மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிபதிகளை நியமனம் செய்யும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவில் சில திருத்தங்கள் தேவை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, ஆணையத்தின் உறுப்பினர்கள் இரண்டு பேர் எதிர்க்கும் பட்சத்தில் நீதிபதிகளை நியமிக்க முடியாது என்ற வீட்டோ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல் ஆணையத்தில் இடம்பெறும் சட்ட அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் நீதிபதியை நியமிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலும் மாற்றம் தேவை என்றும் அவர் கூறினார்.
நீதிபதிகள் தேர்வு செய்வதற்கான ஆணையம் அமைப்பதற்காக இரண்டு மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இனிமேல் கொலிஜியம் முறையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் மூலம் நியமிக்கப்படுவார்கள்.
நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக சமீப காலமாக சர்ச்சைகள் கிளம்புகின்றன. அதயொட்டியே நீதிபதிகள் நியமனத்தில் மாற்றம் கொண்டுவரும் சட்ட திருத்த மசோதாவை கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.