தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி கவிதா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், நிஜாமாபாத் தொகுதி எம்.பி.யுமான கவிதா, சில தினங்களுக்கு முன் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், தெலங்கானாவும், ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் பகுதிகளாக இருந்ததில்லை என்றும் கட்டாயப்படுத்தி இந்தியாவுடன் அவற்றை இணைத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையொட்டி நீதிமன்ற உத்தரவுப்படி மக்களவை எம்.பி கவிதா மீது தேசத்துரோகம், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் எம்.பி கவிதா தன்னுடைய பேச்சு திரிக்கப்பட்டுவிட்டதாகவும் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும் தற்போது விளக்கமளித்திருக்கிறார்.