பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்,
‘பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், இந்தாண்டு ரூ.58,425 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும் விவகாரத்தில், பங்குகள் விற்பனைத் துறையால் (டி.ஓ.டி.) ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓ.என்.ஜி.சி., என்.ஹெச்.பி.சி. உள்ளிட்ட நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. இதுதவிர்த்து செயில் (எஸ்.ஏ.ஐ.எல்.) நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளையும், ராஷ்ட்ரீய இஸ்பத் நிகாம் (ஆர்.ஐ.என்.எல்.), ஹால் ஆகிய நிறுவனங்களில் 10 சதவீத பங்குகளையும் நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
‘டையர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை உடனடியாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஜிங்க், பால்கோ ஆகிய நிறுவனங்களில் இருக்கும் அரசு பங்குகளை விற்பனை செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது’ என்று அருண் ஜேட்லி கூறினார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.43,425 கோடியும், பிற அரசு நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.15,000 கோடியும் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2013-2014ஆம் நிதியாண்டில் ரூ.40,000 கோடி திரட்டஇலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.15,820 கோடி மட்டுமே திரட்டப்பட்டது. இதேபோல, 2012-2013ஆம் நிதியாண்டில் ரூ.23,957 கோடியும் (இலக்கு நிர்ணயம் ரூ.30,000 கோடி), 2011-2012ஆம் நிதியாண்டில் ரூ.13,894 கோடியும் (இலக்கு நிர்ணயம் ரூ.40,000 கோடி) திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.