1976ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான காங்கோவின் எபோலா நதிக்கரையோரம் மர்மமான நோய் மனிதர்களை தாக்கி பலிகொண்டது. அந்நோய்க்கு காரணமான வைரஸ் கிருமிக்கு எபோலா நதியின் பெயர் வைக்கப்பட்டது. ஆப்பிரிக்க காடுகளில் இருக்கும் பழந்திண்ணி வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவிய எபோலா நோய், இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் ‘எபோலா’ வைரஸ் உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நோய் பாதித்துள்ள லைபீரியா, கயானா, சியாரா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கயனாவில், எபோலா வைரஸ் தாக்குலால் இது வரை 932 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,700-க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பாதிப்பை இந்நோய் ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்கரெட் சான் கூறினார்.
சமீபத்தில் ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் இரு நாள் அவசரக் கூட்டத்தில் எபோலா வைரளை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. எபோலா வைரஸ் நோயால் சுமார் 1,000 உயிரிழந்துள்ளனர். அந்த நோய் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் உலகளாவிய சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நோயின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் பிற நாடுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்த நோய் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது.
நோய் எப்படி பரவுகிறது?
வியர்வை, எச்சில், ரத்தம், விந்து,சிறுநீர் போன்ற உடல் திரவங்கள் மூலம் எபோலா நோய் கிருமிகள் பரவுகின்றன. இந்த கிருமி தாக்கினால் காய்ச்சல், தலைவலி, சோர்வு, வயிற்றுப்போக்கு, கட்டுக்கடங்காத ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்நோயை குணப்படுத்த மருந்து எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.
இந்தியாவில் எபோலா தடுப்பு நடவடிக்கை:
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்படும் டெல்லி, மும்பை விமான நிலையங்களில் பயணிகள் சோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல கர்நாடக அரசும் விமான நிலையத்தில் பயணிகளை மருத்துவ பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளது.