சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 2
ராஜஸ்தானி கீ ஹோல்டர்
ஜெயஸ்ரீ நாராயணன்
கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்
வீட்டின் சாவிகள் தொலையும் பிரச்னை தீர்க்கும் கீ ஹோல்டரை நீங்களே செய்யப் போகிறீர்கள். அதிகமாக நுணுக்கங்களும் முதலீடு தேவைப்படாத ராஜஸ்தானி கீ ஹோல்டரை தயாரித்து நீங்கள் விற்கவும் செய்யலாம். மாதிரியை கற்றுக் கொள்ளுங்கள். இதிலே உங்கள் சொந்த புது முயற்சிகளைச் சேர்த்து வகை வகையான கீ ஹோல்டர்களை தயாரிக்கலாம்.
செய்முறை விளக்கத்துக்கு விடியோவைப் பாருங்கள்.
தேவையானவை: கார்டு போர்டில் ஒட்டக கட் அவுட், பசை, ஃபேப்ரிக் லைனர்கள், அக்ரலிக் பெயிண்ட் 4 நிறங்களில், இணைப்பு மணிகள், சம்க்கி, குந்தன் கற்கள், தட்டையான பிரஷ், கத்தரிக்கோல்கார்டு போர்டுடன் தேவையான உருவம் வரைந்து மர வேலை செய்பவர்களிடம் கொடுத்தால் தேவையான உருவத்தை வெட்டிக் கொடுத்து விடுவார்கள். அந்த மரப் பலகையில் முதலில் வெளிறிய நிற அக்ரலிக் பெயிண்டை எடுத்து இதுபோல பூசுங்கள். அடுத்து அதே வகையில் சேரும் சற்றே அடர் வண்ணத்தை அதன் அடிப்பகுதியில் கலந்தாற்போல பூசுங்கள். உதாரணத்துக்கு இங்கே மஞ்சள் நிறத்தையும் வெளிர் சிவப்பு நிறத்தையும் பூசிவிட்டு அடர் நிறத்துக்கு அடர் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.வெவ்வேறு வண்ணங்களின் நிழல்கள்(Shade) வரும் வகையில் வண்ணம் பூசி முடித்ததும் நன்றாக உலர விடுங்கள். உலர்ந்ததும் இதோ இப்படி பச்சை நிற லைனரில் ஆரம்பித்து ஒட்டகத்தை அலங்கரிக்கலாம்.படத்தில் காட்டியுள்ளபடி ஒவ்வொன்றாக செய்யுங்கள். முத்து, குந்தன் கற்கள், சம்கி, இணைப்பு மணிகள் போன்றவற்றை ஒட்ட வேண்டும். பச்சை, வெள்ளை நிற லைனர்கள் கொண்டு எளிய டிசைன்களை வரையலாம். இப்படி அனைத்தையும் செய்துவிட்டு, ஒரு நாள் நன்றாக உலர விடுங்கள்.அலங்காரங்கள் உலர்ந்ததும் இதுபோன்ற பூ திருகாணிகள் (flower screws) வாங்கி மர வேலை செய்பவர்களிடம் கொடுத்தால் பொருத்தித் தருவார்கள். அதுபோல கீ ஹோல்டரை சுவற்றில் மாட்டுவதற்கேற்ற கொக்கியையும் பொருத்த வேண்டும்.இதோ தயாரான ராஜஸ்தானி டெகரேட்டிவ் கீ ஹோல்டர் இப்படித்தான் இருக்கும்!
சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணனை தொடர்பு கொள்ளலாம்.