கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8,9 ம் வகுப்பு படித்துவந்த 2 மாணவிகள் ஜூலை 11ம் தேதி காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களை பல இடங்களிலும் தேடினர். இந்நிலையில், இரு மாணவிகளும் வடலூரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வரும் சதீஷ்குமார் (வயது 28) என்பவரிடம் சிக்கி இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து போலீஸார் மாணவிகள் இருவரையும் மீட்டு, மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். போலீஸார் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
மாணவிகள் இருவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு செல்வார்களாம். அங்கே அருள்தாஸ் (60) என்ற மதபோதகர், மாணவிகள் இருவரையும் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் தெரிந்து கொண்டு, மாணவிகள் இருவரையும் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார். பின்னர், விருத்தாசலத்தில் பாலியல் தொழில் நடத்திவந்த கலா என்பவரிடம் மாணவிகள் இருவரையும் ரூ.5 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஒப்படைத்துள்ளார். கலா அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பெண் ஜெமீனா என்பவரிடம் ரூ.25 ஆயிரம் பெற்று மாணவிகள் இருவரையும் ஒப்படைத்துள்ளார். அந்தப் பெண் ஜெமீனா வடலூரைச் சேர்ந்த சதீஷ்குமாரிடம் ரூ.25 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஒப்படைத்துள்ளார்.
சதீஷ்குமார் 2 மாணவிகளையும் புதுவை, கடலூர், விழுப்புரம் என பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இந்நிலையில், மாணவிகள் இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஒரு பெண்ணிடம் சிக்கியிருந்தபோது, அரசியல் பிரமுகர்கள் சிலரும் வந்து சென்றதாகக் கூறியுள்ளனர். இதை அடுத்து அந்த நபர்களைப் பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில், சதீஷ்குமார், லட்சுமி, கலா, ஜெமினா, மதபோதகர் அருள்தாஸ் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.