போக்குவரத்து நிறைந்த பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் பட்டிமன்றம் நடத்த அதிமுகவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவினை தாக்கல் செய்துள்ள சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, போக்குவரத்து நிறைந்த மதுரை தெற்குமாசி வீதி, மேலமாசி வீதியில் அதிமுக சார்பில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் பட்டிமன்றத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் பொதுக்கூட்டங்களோ, பொது நிகழ்ச்சிகளோ நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதன்மூலம் மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை திடீர் நகர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டபோதும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையரும் மாவட்ட ஆட்சியரும் 2 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.