இன்று கொள்ளு நம் அன்றாட சமையலில் இருந்து வழக்கொழிந்து விட்டது. கொள்ளு விலையும் தென்மாவட்டங்களில் கூட உணவுத் தயாரிப்பில் அதற்குரிய இடத்தை இழந்துவிட்டது என்றே சொல்லலாம். கொள்ளை துவரயை பருப்பாக மாற்றி வருடம் முழுக்க பயன்படுத்தியதைப் போல கொள்ளிலிருந்து கொள்ளு பருப்பு தயாரித்து பயன்படுத்தும் பழக்கம் இந்த மாவட்டங்களில் இருந்தது. சாமையில் செய்த சாதமும் கொள்ளு பருப்பு குழம்பும் அபாரமான இணைகள். இந்த உணவுக்குறிப்பை மற்றொரு பதிவில் பார்ப்போம். இந்தப் பதிவில் பட்ஜெட் சமையல் வரிசையில் கொள்ளுப் பொடி தயாரிப்பைப் பார்ப்போம். கொள்ளு இயற்கை உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். துவரம் பருப்பை விட இதன் விலை குறைவுதான். அதே சமயம் இதில் உள்ள சத்தும் குறைவில்லாததே!
தேவையானவை:
கொள்ளு – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கொள்ளு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். நன்றாக ஆறிய பிறகு தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். கொள்ளு உடலுக்கு பலம் சேர்க்கவும் உடலை இளைக்க வைக்கவும் பாரம்பரிய மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.