கடந்த பத்து ஆண்டுகளில் 157 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 15 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மட்டுமே விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றுக்கு மத்திய பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அளித்துள்ள பதிலில், “1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், கடந்த பத்து ஆண்டுகளில் 157 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் மீது ஊழல், கையூட்டு பெறுதல், அரசுக்கு இழப்பை ஏற்படுத்துதல், வருவாய்க்குப் பொருத்தமில்லாத வகையில் சொத்து சேர்த்தல், ஒழுங்கின்மை, மோசடிகளுக்கு உடந்தையாக இருத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 142 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. 71 அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது’ என்றும் அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.