காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு 2,500 கிலோ இந்திய சந்தனக் கட்டைகளை பிரதமர் நரேந்திர மோடி தானமாக வழங்கியுள்ளார். அரசு முறைப் பயணமாக நேற்று நேபாளம் சென்ற நரேந்திர மோடி ருத்ராட்ச மாலை அணிந்து, இன்று காலை காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதி நாதர் கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்தார். பிறகு, இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 2,500 கிலோ எடையுள்ள சுத்தமான சந்தனக் கட்டைகளை கோயிலுக்கு மோடி தானமாக வழங்கினார். கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு தினமும் அரை கிலோ சந்தனம் தேவைப்படும் நிலையில், மோடி வழங்கியுள்ள சந்தனக் கட்டைகளால், கோயில் நிர்வாகத்துக்கு மிகப்பெரிய கவலை தீர்ந்துள்ளதாக மோடியிடம் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மோடி அளித்துள்ள சந்தனக் கட்டைகளின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.