தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் இணையதளத்தில் செய்தி வெளியிட்ட இலங்கையை கண்டித்து தமிழ் திரைப்படத்துறையினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சரத்குமார், சிவக்குமார், விவேக், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்களும், கே.ஆர், கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர். மேலும்,திரைப்பட விநியோகஸ்தர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக முதலமைச்சரை கொச்சைப்படுத்திய இலங்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற உள்ள ராணுவ கருத்தரங்குகளில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின்போது ராஜபக்சேவின் உருவ பொம்மையையும் எரிக்க முயற்சி செய்தனர்.