‘சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில் திமுக தியாகராய நகரில் கண்டனப் பொதுக் கூட்டத்தை நேற்று நடத்தியது.
கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசும்போது சட்டப்பேரவையில் குரல் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சட்டத்தை வைத்து திமுகவினருடைய குரலைத் தடுக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.1957-ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் நுழைந்தேன். 50 ஆண்டுகளாகப் பேரவையின் உறுப்பினராக உள்ளேன். எனது உடல் நிலைக்கு ஏற்றவாறு இருக்கை ஒதுக்கப்படாததால், தற்போது என்னால் சட்டப்பேரவைக்குச் செல்ல முடியவில்லை.
மாநிலங்களவைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தேன். வயது முதிர்ந்த இரண்டு உறுப்பினர்களுக்கு அவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், சட்டப்பேரவையில் எனக்கு அதுபோல இருக்கை அளிக்கப்படவில்லை. இத்தனைக்கும் முதல்வர் ஜெயலலிதாவும் நானும் வேறு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இருவரும் கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதா கலைத்துறையிலே இருந்தபோதே நான் அவரை அறிவேன். அவரை அன்றைக்கே நான் அன்போடு விசாரித்து பாராட்டியவன். ஆனால், அதற்கு என்ன பிரதியுபகாரம் என்று கேட்டால், பிரதியுபகாரம் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த முறை என்னை ஒரு நாள் நள்ளிரவிலே கைது செய்து சிறையிலே வைத்தார் ஜெயலலிதா. அது தான் அவர்கள் எனக்கு காட்டிய நன்றி. அவர் எனக்கு செய்த பிரதியுபகாரம். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் துன்புறுவதால், எனக்கு சங்கடங்கள் ஏற்படுவதால் நான் வருத்தப்படவில்லை.
இப்போது அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லாமல் போய்விட்டது. ஜனநாயகம் என்பது விலைக்கு வாங்கும் பொருளாக உள்ளது. அதிகாரிகளின் காலடியில் மிதிபடும் பொருளாக ஜனநாயகம் உள்ளது. அந்தக் காலடியை அகற்றி ஜனநாயகத்தை மீட்க வேண்டும்.‘சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ. ஜனநாயகம் என்பது அணையாத வீட்டு விளக்கு’ என்று அண்ணா கூறினார்.
எனவே, ஜனநாயகத்தைச் சீரழிக்கும் அரசைத் தடுத்து நிறுத்தி ஜனநாயகம் என்னும் வீட்டு விளக்கைக் காப்பாற்ற இளைஞர்கள் முன் வரவேண்டும் என்றார் கருணாநிதி. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்படப் பலர் பங்கேற்றனர்.