சிங்கப்பூரில் வசித்துவரும் ஜெயந்தி சங்கர் தமிழ் இலக்கிய பரப்பில் அவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களைல் இயங்கிவருபவர். சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கும் இவருடைய பெருஞ்சுவருக்குப் பின்னே(உயிர்மை வெளியீடு) மிக முக்கியமான கட்டுரை தொகுப்பு நூல். மனப்பிரிகை (சந்தியா பதிப்பகம்), குவியம் (சந்தியா பதிப்பகம்), திரிந்தலையும் திணைகள் (சந்தியா பதிப்பகம்) ஆகிய புதினங்களும் மனுஷி (மதி நிலையம்), திரைகடலோடி (மதி நிலையம்), தூரத்தே தெரியும் வான்விளிம்பு (சந்தியா பதிப்பகம்),முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும் (அம்ருதா பதிப்பகம்) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் சமீபத்தில் வெளியான இவருடைய நூல்கள்.
இலக்கியம், குடும்பம், பெண்ணியம் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஷாந்தினி முத்தையா, அருண் மகிழ்நன் ஆகியோர் மின்னஞ்சலில் ஜெயந்தி சங்கரிடம் எடுத்த நேர்காணல் இரண்டாம் பகுதி இது… முதல் பகுதி இங்கே!
நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள் சரியாக நடத்துகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஜெயந்தி சங்கர்: பெண்ணை தாய், அன்னை, தாய்க்குலம், சக்தி அது இது என்று ஒரேயடியாக glorify செய்வது அல்லது புழுவென மிதித்துக் கடாசுவது ஆகிய இருவகை ஆண்கள். பெரும்பாலும் பெண்ணை கிள்ளுக்கீரையாக நினைக்கும் ஆண்கள் அல்லது அச்சுறுத்தலாக நினைக்கும் ஆண்கள் தான். அச்சுறுத்தலாக நினைக்கும் ஆண்களில் பலர் தங்களது தாழ்வு மனப்பான்மையை இட்டு நிரப்ப, பெண்ணை அவமதிப்பார்கள். கிள்ளுக்கீரையாக நினைக்கிறவரே மேல் என்று நாம் நினைக்கும் அளவிற்குப் போகும் இது. புதுவகை ஒன்றுண்டு. ஆணாதிக்கமே என்னிடம் இல்லை பார் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிறுவி விட முயன்று கோமாளியாகும் ஆண். பெரும்பாலும் வெற்றியடையாதபோதிலும் குறைந்தபட்ச முயற்சிக்காக வேண்டுமானால் இவரை மன்னித்து விடலாம்.
சிங்கப்பூரின் இலக்கியவெளியில் பெண்கள் பங்காற்ற முடியுமா?
ஜெயந்தி சங்கர்: ஏற்கெனவே பல பெண்கள் கால் பதித்து வருகிறார்களே.
உங்கள் பதிப்பாளர்கள் உங்களுக்கு ஆதரவு நல்குகிறார்களா?
ஜெயந்தி சங்கர்: அவரவர் அளவில் ஆதரவாக இருக்கிறார்கள். இதை தமிழ் பதிப்புலகம் இயங்கும் முறையை வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலப் பதிப்புலம் போல தமிழ் பதிப்புலகம் இயங்குவதில்லை.
உங்கள் நூல்கள் பதிப்பிக்க ஆகும் செலவை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?
ஜெயந்தி சங்கர்: செலவுகளைச் சமாளிப்பது எல்லாமே நான் தான். கணவரும் பொருளாதார உதவி செய்வதுண்டு. மற்றபடி எந்த வித வெளி உதவியும் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை.
குடும்பத்தையும் வேலையையும் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?
ஜெயந்தி சங்கர்: என்னுடைய நேர நிர்வாகம் சிலநாட்கள் நானே கர்வப்படும் அளவிற்கும் சிலநாட்கள் மிக வெட்கப்படும் அளவிற்கும் போகும். எந்த நெருக்கடியையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அந்தந்த நாளை சுவாரசியமாக அவதானித்துக் கடக்கிறேன். பெரிய இலக்குகள், அதனால் நெருக்கடிகள் ஏற்படுத்திக் கொள்வதில்லை.
கரிகாலன் விருது குறித்துச் சொல்லுங்கள்
ஜெயந்தி சங்கர்: திரிந்தலையும் திணைகள் நாவலுக்கு கரிகாலன் விருது வழங்கப்பட்டது. டிசம்பர் மாதம் செய்தி வந்த பின்னர், விருது வாங்க தஞ்சை சென்றேன். விருது, கவனம், பயணம், மேடை, மாலை, பொன்னாடை, பாராட்டுகள், அறிமுகங்கள், அங்கீகாரம், சான்றிதழ், பூச்செண்டு, புகைப்படங்கள் ஆகிய அனைத்தையும் தாண்டி கரிகாலன் விருது நடுவர் குழு அளித்த தேர்வறிக்கை தான் என் மனதுக்கு மிகப் பிடித்ததாக இருந்தது. மேடையில் ஏற்புரையிலும் இதையே தான் நான் சொன்னேன். ஒரு நூலில் நூலாசிரியர் சொல்ல நினைத்ததை ஒரு வாசகர், ஒற்றை வாசகர் சரியாகப் புரிந்துகொண்டாலே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும். ஒரு பல்கலைக்கழகத்தின் விருது நடுவர் குழு அந்த நூலைச் சரியாக உள்வாங்கியிருந்தது மிகுந்த நிறைவைக் கொணர்ந்தது.
முன்னணியில் 5 தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக நீங்கள் உங்களை மதிப்பிடுவீர்களா?
ஜெயந்தி சங்கர்: சிங்கப்பூர் எழுத்துலகம், (Diaspora) புலம்பெயர் எழுத்துலகம் என்று எடுத்துக்கொண்டால், நேரடியான பதில் ஆம். விரிவான பதில் சொல்வதென்றால், என் வரையில் இந்த முன்னணி, பின்னணிகளில் நம்பிக்கை இல்லை. ஏனெனில், போட்டி போடுவோருக்கு, முகமூடிகளை அணிந்து, பிம்பங்களை உருவாக்கிக் கொண்டு அதைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கும் படைப்பாளிகளுக்குத் தானே அதெல்லாம் முக்கியம். தன் போக்கில் அமைதியாக தெளிந்த நீரோடை போல இயங்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவருக்கு அதெல்லாம் வேண்டாதது. அவை புத்தாக்கத்திற்குத் தடையாகலாம் என்றும் சொல்வேன்.
சிங்கப்பூரில் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்த பிறகு, சிங்கப்பூரின் ஒரு பகுதியாக உணர்கிறீர்களா?
ஜெயந்தி சங்கர்: நான் சிங்கப்பூரின் ஒரு பகுதி தான். ஆனால், 10, 12 ஆண்டுகளுக்கு முன்னர் மனதளவில் நான் சிங்கப்பூரராக உணர்ந்தபோது யாருமே என்னை இப்படிக் கேட்டதில்லை. இப்போது நான் உலகக் குடிமகளாக உணரும் வேளையில் இதை என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள்.
எந்த அச்சமோ தயக்கமோ இல்லாமல் புத்தாக்கத்துடன் உங்களால் எழுத முடிகிறதா?
ஜெயந்தி சங்கர்: கண்டிப்பாக. ஒரு விஷயத்தை எழுதுவதா வேண்டாமா என்பதில் தயக்கம் இருக்கலாம். எழுதுவது என்று முடிவான பிறகு எந்தத் தயக்கமும் என்னில் இருப்பதில்லை.
உங்கள் படைப்புகளில் சிறந்தவை என்று நீங்கள் நினைப்பவை எவை?
ஜெயந்தி சங்கர்: ‘மனப்பிரிகை’, ‘திரிந்தலையும் திணைகள்’ ஆகிய இரண்டு நாவல்களையும் சொல்லலாம். ’மனப்பிரிகை’க்குக் கிடைத்திருக்க வேண்டிய கவனமும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பது அப்படைப்பின் குறையில்லை. நமது இலக்கிய உலகின் குறை.
யார் உங்கள் படைப்புக்களைத் திருத்துகிறார்?
ஜெயந்தி சங்கர்: புனைவைத் திருத்துவதற்கும் அ புனைவை, தொழில்சார்ந்த எழுத்தைத் திருத்துவதற்கும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடு உண்டு என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதைச் சொல்லிவிட்டு பதிலுக்குப் போகிறேன்.
எழுதும் போது செய்வதைத் தவிர நூலாக்கத்தின் போது, நான் ஒருமுறை எடிட், ஃப்ரூஃப் செய்வேன். பதிப்பாளர் இன்னொரு முறை செய்வார். தமிழ் பதிப்புலகம் இயங்கும் முறையை வைத்து இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், ஆங்கிலப் பதிப்புலம் போல தமிழ் பதிப்புலகம் இயங்குவதில்லை.
உங்கள் படைப்புகளில் உங்கள் மனதுக்கு நெருக்கமானவை எவை?
ஜெயந்தி சங்கர்: எல்லாமே தான். இருந்தாலும் ‘மனப்பிரிகை’, ‘திரிந்தலையும் திணைகள்’ ஆகிய இரண்டு நாவல்களைச் சொல்லலாம். அ புனைவில் ‘பெருஞ்வருக்குப் பின்னே’ என்ற நூலைச்சொல்வேன். தமிழில் இல்லாத நூல் வகை இது. மொழிபெயர்ப்பில் ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’, என்ற சீனக் கவிதை நூலையும் ‘என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி’ என்ற சீனத்துச் சிறுகதை நூலையும் சொல்லலாம்.
உங்களுடைய ஆகச் சிறந்த ஆக்கத்தைக் குறித்து விரிவாகச் சொல்லுங்கள்.
ஜெயந்தி சங்கர்: திரிந்தலையும் திணைகள் நாவலைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன். உலகமயமாக்கல் பூமிப்பந்தைச் சுருக்கி வரும் வேளையில் நாடுகளிடையேயும் பழந்தமிழ் திணைகளுக்கிடையேயும் நிலவிய எல்லைகள் மறைக்கப்பட்டுவிட்டன. புலம்பெயர்வுகள் அதிகரித்து, நாடுகளிடையே எல்லைகள் மறைந்து, ஒவ்வொரு மனிதனும் தனக்குள் விரியும் அகன்ற அகவெளியை ஏந்தி அலைகிறான். அதனால், ஒவ்வொரு மனிதனுமே ஒரு திணையாகிறான். உள்நாட்டுக்குள், வெளிநாட்டுக்கு புலம்பெயர்தலால் அலைக்கழிக்கப்படும் மனிதர்களைப் பற்றியது இந்தப் புதினம். இடப்பெயர்வுகளுக்கு ஆளாவது ஆலயங்களும் அதில் குடிகொள்ளும் தெய்வங்களும் தான். இரண்டு பெண்களைப் பற்றிய நாவல் என்றும் இதை நாம் வாசிக்க முடியும். சிங்கப்பூரின் செம்பவாங் வட்டாரம் 20 ஆண்டுகளில் கண்டுள்ள மாற்றங்கள் இந்தநாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
எழுத்துப்பயணத்தில் எதுவரை போக விருப்பம்?
ஜெயந்தி சங்கர்: இக்கணத்தில் தோன்றுவது. என் மூளை, யோசிக்கும் திறனைத் தக்கவைத்துக்கொள்ளும் காலம் வரை என்று சொல்லலாமா? இலக்கியத்தில் என்னுடையது எப்போதுமே ஓர் ஆன்மிகம் சார்ந்த தேடல் என்றே உணர்கிறேன். என்னை நானே கண்டடையவும் என்னை தொடர்ந்து பக்குவப்படுத்திக் கொண்டு, மேம்படுத்திக்கொண்டு முன்னகர இந்தத் தேடல் எனக்கு மிக உறுதுணையாக இருக்கிறது.
உங்கள் பொழுதுபோக்குகள் யாவை?
ஜெயந்தி சங்கர்: இசை வகைகளில், குறிப்பாக வீணை இசையில் எனக்கு ஈடுபாடு உண்டு. அது தவிர, புத்தகம். எப்போதேனும், நேரமிருப்பின் ஈரான், கொரியா, ஸ்பானிஷ், சீனம், ஹிந்தி போன்ற உலக சினிமா பார்ப்பேன். ஆங்கில சப் டைட்டிலுடன் தான்.
Man booker Prize அல்லது Pulitzer Prize போன்ற விருதுகளுக்கு எழுதும் நோக்கமுண்டா?
ஜெயந்தி சங்கர்: ஏதோ ஓர் இலக்கை நோக்கிப் போகும் எழுத்துப்பயணம் அல்ல என்னுடையது. எழுத்துப் பயணத்தில் முடிவை விட பயணம் எனக்கு முக்கியம். இங்கே தான் நான் எப்போதும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு வருகிறேன். அது போன்ற இலக்குகள் படைப்புகளின் இயல்பை, அழகை அழிக்கக் கூடிய ஒருவித நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன என்றே நினைக்கிறேன். நான் எழுதுவது முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும். பின்னர் வாசகர்களுக்கு. அதன் பிறகு இது போன்ற போட்டிகளுக்கான நடுவர் குழுகளுக்கும் பிடித்து என்னைத் தேடி விருதுகள், அங்கீகாரங்கள் வந்தால் மகிழ்ச்சி தான். ஊக்கமும் கூட. இருப்பினும், அவற்றை நோக்கி என் பாதையை அமைத்துக் கொள்வதில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை.
ஜெயந்தி சங்கரின் நூல்களைப் பெற தொடர்புகொள்ளவேண்டிய பதிப்பகங்களின் முகவரி
சந்தியா பதிப்பகம்
புதிய எண். 77, 53வது தெரு,
9வது அவென்யூ, அஷோக் நகர்
சென்னை – 600 083, இந்தியா.
தொலைபேசி எண்: 044-24896979
காவ்யா பதிப்பகம்
16, இரண்டாம் குறுக்குத் தெரு,
டிரஸ்ட் புரம்,
கோடம்பாக்கம்,
சென்னை – 600024
தொலைபேசி – 44-23726882, 9840480232