உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுவே தற்போது நீதிபதிகளை தேர்வுசெய்து வருகிறது. இந்த தேர்வுக்குழு முறையில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக சர்ச்சை கிளம்பியதால், அம்முறையை மாற்றிவிட்டு, புதிதாக நீதித்துறை நியமனங்களுக்கான ஆணையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட நிபுணர்களுடன் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தினர்.
இதில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஏ.எம்.அகமதி, வி.என்.கரே, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி, பாலி நாரிமன், கே.டி.எஸ்.துளசி, கே.கே.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, நீதிபதிகள் நியமனத்தில் தற்போதுள்ள தேர்வுக்குழு முறையை மாற்றிவிட்டு, புதிய ஆணையம் அமைக்க சட்ட வல்லுநர்கள் பலரும் ஆதரவு தெரிவித்ததாக கூறினார்.