ஒரு சொல் கேளீர்
நந்தினி
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி நாளை இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர், இந்திய தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக பிரச்னைகள் குறித்து பேச உள்ளார். ஜான் கெர்ரியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடன் இணைந்து பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் சந்திக்கும் போது பேச உள்ள விவகாரங்கள் குறித்து அலசுவார்கள் என்று தெரிகிறது. பின்னர் பிரதமர் மோடியையும் கெர்ரி சந்திக்க உள்ளார்.
அமெரிக்கா அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் செப்டம்பர் மாதம் அந்நாட்டிற்கு செல்ல உள்ளார். இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தையில், நாட்டின் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க இந்திய இணைந்த வளர்ச்சி 2020 என்ற நிகழ்ச்சியில் பேசிய ஜான் கெர்ரி, பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களில் ஒன்றான மக்களுக்காக, மக்களுக்கான நல்லாட்சி என்ற திட்டம் தொலை நோக்குப்பார்வை திட்டம் என பாராட்டி உள்ளார். மேலும் அவர் கூறும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இது மிகுந்த பயன் அளிக்கும் என்றும் இத்திட்டத்திற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் தெரிவித்தார். இரு நாடுகளும் இணைந்து கால நிலை மாற்றத்தையும் உலகலாவிய சவால்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
வளரும் நாடுகளான பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனாவுடன் இணைந்து அமெரிக்காவின் எதிரியான ரஷ்யா பிரிக்ஸ் மாநாட்டை கடந்த மாதம் நடத்தியது. இந்நாடுகளின் வளர்ச்சிக்காக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி நிறுவப்படுவதற்கான அறிவிப்பும் வெளியானது. ரஷ்யாவின் பொருளாதார நிலைமை சீரடைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பும் வளரும் நாடுகளுடான (மனித வளத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளும்கூட) இந்த உறவும் அமெரிக்காவை நிச்சயம் அசைத்திருக்கும்.
இந்தியாவுடனான நல்லுறவை பேண அமெரிக்கா, வலிந்து செய்யும் சில நகர்வுகள் வளரும் நாடுகளின் மேல் உள்ள அமெரிக்காவின் பயத்தை காட்டுவதாக அமைந்துள்ளன. சீனா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளின் மனித வளத்தை நம்பி கணிசமான அளவு அமெரிக்க தொழில்கள் உள்ளன. உக்ரைன் பிரச்னைக்குப் பிறகு ரஷ்யா மீண்டும் ஒரு பனிப்போருக்கு தயாராகி வருவதுடன் அது தன்னுடைய உறவை வளரும் நாடுகளுடன் பேணுவதில் கருத்தாக இருக்கிறது. எனவே, குஜராத் படுகொலைகள் காரணமாக மோடிக்கு விசா வழங்க மறுத்த விஷயத்தை பேசுவதைக் கூட இந்திய அமெரிக்க உறவை கசப்பாக்கிவிடும் என்று முந்திக்கொண்டு, அமெரிக்கா போக இருக்கும் மோடிக்கு விசா இப்போதே ரெடி என்கிறது அமெரிக்கா.
பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் மக்களுக்காக மக்களுக்கான நல்லாட்சி என்ற திட்டம் பற்றி சிலாகிக்கிறது. இப்படி பேப்பரில் உள்ள திட்டங்களையெல்லாம் புகழும் அளவுக்கு அமெரிக்காவின் நிலைமை சென்று விட்டதை எண்ணுவதா அல்லது இதுவரை ஆட்சிக்கு வந்து மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செய்யாத, மக்களை விலைவாசி உயர்வு என்னும் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கும் மோடியை அமெரிக்காவே புகழ்வதாக நம்பிக்கொண்டிருக்கும் நம்மை எண்ணி வருந்துவதா?