டெல்லி பள்ளி மாணவி துப்பாக்கி முனையில் ஐவரால் கூட்டு பலாத்காரம்: மூவர் கைது
டெல்லியில் பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஒருவர், ஐந்து பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரக்கு உள்ளானார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் பதின்ம வயதுடையவர்கள். மேற்கு தில்லி, உத்தம் நகர் பகுதியில் அந்தப் பள்ளி மாணவி ஜூலை 19ம் தேதி காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, நான்கு பேர் அவரைப் பின் தொடர்ந்து வந்தனராம். அவர்களில் இருவர் மைனர், இருவர் அவருக்கு ஏற்கெனவே தெரிந்தவர்கள். அவர்கள் நால்வரும் மாணவியை ஜரோடா பகுதியில் சுரேந்தர் பெஹல்வான் வீட்டுக்குள் தூக்கிச் சென்று, துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை செல்போனில் படம் எடுத்து, எம்.எம்.எஸ் அனுப்பி, இதை வெளியில் சொன்னால் இணையத்தில் ஏற்றி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், அந்த மாணவிக்கு உடல் ரீதியான பிரச்னை வரவே, அவர் பயந்து போய், தன் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதை அடுத்து, அவரது பெற்றோர், போலீஸில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், சம்பவத்தில் தொடர்புடைய இரு மைனர் நபர்கள் உள்ளிட்ட மூவரைக் கைது செய்துள்ளனர். இருவரைத் தேடி வருகின்றனர்.
திருமணமாகி 10 மாதமே ஆன இளம்பெண் ஒருவர் தீயில் கருகி சாவு: கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு
திருவாடானை அருகே திருமணம் முடிந்து 10 மாதங்களே ஆன இளம் பெண் சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து உயிரிழந்தார். இது குறித்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகா பாசிப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் ஹசிரா பானு (22). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அஜீஸ் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து அவர் பலத்தக் காயம் அடைந்து ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இது குறித்து ஹசிரா பானுவின் தாயார் சம்சுபீவி புகாரின் பேரில் எஸ்.பி. பட்டிணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நண்பரே தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக டெல்லி மாணவி போலீஸில் புகார்
நண்பர் ஒருவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக டெல்லி பல்கலைக்கழக மாணவி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீஸர் கூறியதாவது: தெற்கு டெல்லி மெஹரவுலி காவல் நிலையச் சரகத்தைச் சேர்ந்த 25 வயது மாணவி, தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவருக்கும், காஜியாபாதைச் சேர்ந்த அனில் சர்மா (28) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்புடன் பழகி வந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை அனில் குமார் சம்பந்தப்பட்ட மாணவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வைஷாலி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற அந்தப் பெண்ணை, காஜியாபாத், விஜய் நகரில் உள்ள தனது வீட்டுக்கு அனில் குமார் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மெஹரவுலி போலீஸில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த பகுதி காஜியாபாத் என்பதால் அந்தப் பகுதி காவல் நிலையத்திற்கு முதல் தகவல் அறிக்கை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது
கோவை குரும்பர் வீதியை அடுத்த ம.ந.க வீதியை சேர்ந்தவர் சக்திவேல்(37). மனைவி மகேஸ்வரி. இவர், நேற்று கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் எனக்கும், சக்திவேல் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் சீதனமாக 7 சவரன் அளித்தனர். சக்திவேல் பெயின்டர் தொழில் செய்து வருகிறார். திருமணமான, சில மாதங்களில் சக்திவேலின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. ஆபாச படங்களில் வருவது போல், செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து முன்னரே ஒரு முறை மேற்கு பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தேன்.
போலீஸார் எங்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். அதன் பின்னரும், சக்திவேல் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் சக்திவேலுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, நான் அவரை விட்டு பிரிந்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன். இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல், தனலட்சுமி என்ற பெண்ணை எனக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு, நாங்கள் வசித்து வந்த வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து நான் சக்திவேலிடம் கேட்ட போது, அவர் என்னை தகாத வார்த்தைகளில் திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து மேற்கு பகுதி மகளிர் போலீசார் சக்திவேலிடம் விசாரித்தனர். சக்திவேல், மகேஸ்வரியை திருமணம் செய்வதற்கு முன்னரே மேலும் சில பெண்களை திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து மேற்கு பகுதி மகளிர் போலீஸார் கூறியதாவது: கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும், சக்திவேலுக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டு சில மாதங்களிலேயே கவிதா அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். சில வருடங்கள் கழித்து காமாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவரும் சக்திவேலின் பாலியல் ரீதியான தொந்தரவை பொறுத்து கொள்ள முடியாமல் சில மாதங்களிலேயே பிரிந்து சென்றுவிட்டார். மூன்றாவதாக கஜலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவரும் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின், உறவினர்கள் சேர்ந்து 2013ம் ஆண்டு 4வதாக மகேஸ்வரியை திருமணம் செய்து வைத்துள்ளனர். மகேஸ்வரியும் பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் அவர், தனலட்சுமி என்ற பெண்ணை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளார். யாரையும் முறையாக விவாகரத்து செய்யவில்லை. முந்தைய திருமணங்களை மறைத்து ஒவ்வொரு பெண்ணையும் திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரிந்தது என போலீஸார் கூறினர்.