ஸ்ரீரசா
இன்றுவரை தமிழ் நிலத்தில் பார்ப்பனீயத்தின் அதிகாரத்தை, சாதியத்தின் அதிகாரத்தை நிலை நிறுத்தியதில் சோழர்களின் பங்கே அளப்பரியது. ராஜராஜனும், அவன் மகன் ராஜேந்திரனும் தம் அளப்பரிய அதிகார வலிமையின் துணையோடு, ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் பார்ப்பனியக் கருத்தியலின் அடிமைப் பரம்பரையாகவும் இருந்தனர். அதன் விளைவாக, பார்ப்பனியத்தை மண்ணில் நிலைநிறுத்தும் வகையில் நல்ல வளமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பிரம்மதேயம் என்று அவர்களுக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்தனர். கல்முதலாளி என்று பெரியார் வர்ணிப்பதைப்போல, கோயில்கள் பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் குவித்து, நிலவுடமையைப் பண்பாட்டு ரீதியிலும் நிலைநிறுத்தினர். கோயில்களை மையமிட்டு, தமிழ்ச்சமூகத்தின் மனிதர்களிடையே சாதியத்தை மிகக் கடுமையாக நிலைநிறுத்தினர். பெண்ணடிமைத் தனத்துக்கும் நிரந்தரமான ஏற்பாடுகளைச் செய்தனர்.

கோவில் கருவறைக்குள் பிராமணிய அதிகாரத்தை நிலைநிறுத்தினர். அர்ச்சகர் உரிமையைப் பெண்களுக்கும் மறுதலித்தனர். தேவதாசி முறைமையை வலுப்படுத்தினர். கலை, கலாச்சாரம் அனைத்தையும் புராணமயப்பட்ட, புனைவுக் கருத்தியலில் நிலை நிறுத்தினர். சமூகம் பிராமணக் கருத்தியல் வகைப்பட்டத்தில் இத்தகைய கலைகளும் கலாச்சாரங்களும் பெரும் பங்காற்றின. அதாவது, பிராமணர்களின் மேலாண்மையை ஏற்றுக் கொள்வதில் துவங்கி, சமூகத்தின் மனிதர்களை மேல் கீழ் வகைப்பட்ட சாதிய அடுக்குநிலைகளில் உளவியல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் இருத்தி வைப்பதில், வைத்திருப்பதில் இன்றளவும் பெரும்பங்காற்றி வருகின்றன.. இத்தகைய அவக்கேடான பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்கள்தான் சோழமன்னர்கள்…
அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுவிழா கொண்டாடுகிறோம் என்றால் அதன் பொருள், அத்தகைய சமூகச் சூழல்கள் தமிழ்ச் சமூகத்தில் இன்னும் தொடர்கின்றன என்றே பொருள்.
தமிழர்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டுக் கெட்டிதட்டிப் போனதற்கும் 1000 ஆவது ஆண்டு. சோழன் அவன் கட்டிய கோயில்கள் பல இடிந்து தூர்ந்து விட்டன. அவன் காலத்தில் கட்டமைக்கப்பட்டு இறுக்கப்பட்ட சாதிகள் மேலும் இறுக்கம் வளர்ந்து இன்றும் தமிழர்களைக் கொன்றழித்துக் கொண்டிருக்கின்றன.
ஸ்ரீரசா, எழுத்தாளர், ஓவியர்.
Attagaasam… Spot on!