மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கலவரம், மணல் கொள்ளைச் சம்பவம் ஆகியவை தொடர்பாக கடந்த 22-ஆம் தேதி ஜி.ராமகிருஷ்ணனின் அறிக்கை வெளியானது. அதில், முதல்வரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ராமகிருஷ்ணன் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்துள்ளார். அதனால், முதல்வர் குறித்து அவதூறு தகவல் கொடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு வழக்குரைஞர் ஜெகன் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை இதோ…
வேலூர் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற தலைமைக்காவலர் கனகராஜை மணல் கொள்ளையர்கள் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தின் ஆறுகள் அனைத்திலும் மணலை ஒட்டச் சுரண்டுவதை அதிமுக அரசும் முந்தைய திமுக அரசாங்கமும் கொள்கை நிலைபாடு போலவே தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர். கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, மணல் கொள்ளை எதுவானாலும் உடனடி பரபரப்புகளின் போது அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது போல காட்டிக் கொள்வதும், அதன் பின்னர் குற்றவாளிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததும் வழக்கமாக இருந்து வருகிறது.
உண்மையில் மணல் கொள்ளை ஆளும் கட்சியின் உயர்மட்டத்தில் உள்ளோர் ஆதரவின்றி இவ்வளவு தூரம் நடப்பதற்கு வாய்ப்பில்லை. அதிகாரபூர்வமாக ஆற்று மணல் கொள்ளைக்கு சிலருக்கு உரிமம் தரப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் விதிமுறைகளை சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை.
மணல் கொள்ளையர்கள் பல இடங்களில் மாவட்ட அதிகாரிகளை விட பலம் படைத்தவர்களாகி இணை நிர்வாகத்தை நடத்துபவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். அதற்கடுத்த நிலையிலுள்ள மணல் கொள்ளையர்கள் தடுப்போரை கொலை செய்தால், அதனால் ஏற்படும் செலவுகளை மணல் கொள்ளையின் மூலம் ஈடுகட்டிக் கொள்ள முடியும் என்று புரிந்திருக்கிறார்கள்.
மணல் கொள்ளையை கண்டிக்கும், எதிர்த்துப் போராடும் அரசு அதிகாரிகள், தனிநபர்கள், இயக்கங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். பல இடங்களில் மணல் கொள்ளைக்கு எதிரானவர்கள் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் மணல் கொள்ளையை தடுக்க முயலும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதும், கொலை செய்வதும் நின்றபாடில்லை.
தமிழக அரசு இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பதோடு தனது கடமை முடிந்துவிட்டது என நினைப்பது சரியல்ல. ஏற்கனவே சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டிருக்கும் நிலையில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கொல்லப்படுவது மக்கள் மத்தியில் பீதி உணர்வை உருவாக்கும். தற்போது வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற தலைமைக் காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு தலைமைக் காவலர் கனகராஜ் கொலையில் சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதற்கு முந்தைய தாக்குதல்கள் மற்றும் கொலைகளில் சம்மந்தப்பட்டவர்கள் மீதான சட்ட நடவடிக்கையை துரிதப்படுத்தவும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கும் மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.