மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, கொண்டைக்கடலை, பருத்தி, கத்தரி ஆகியவற்றை வயல்களில் பயிரிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் எண்ணெயை இறக்குமதி செய்யவும் இக் குழு அனுமதித்திருக்கிறது.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள ஆய்வுக்கு அனுமதிப்பது தொடர்பாக கடந்த 4 மாதங்களில் இக் குழு நான்கு முறை கூடி 60க்கும் மேற்பட்ட திட்டங்களை ஆய்வு செய்து முடிவெடுத்திருக்கிறது. இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிப்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து பரிந்துரை அளிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில்,‘‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை கள ஆய்வு செய்ய அனுமதித்தால், அது விதைகளையும், சுற்றுச்சூழலையும், உணவு வழங்கல் சங்கிலியையும் சிதைத்து விடும். அதுமட்டுமின்றி, மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வை கண்காணிக்க முறையான ஒழுங்குமுறை அமைப்பு இல்லை. எனவே, இத்தகைய கள ஆய்வுக்கு தடை விதிக்க வேண்டும்’’என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவசரமாக இப்பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.