புதிய தொழிற்சாலைகளை பதிவு செய்து உரிமம் வழங்குதல் மற்றும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட சுமார் 42,000 தொழிற்சாலைகளின் உரிமங்களை ஆண்டுதோறும் புதுப்பித்தல் போன்ற பணிகளில் நடைமுறையில் உள்ள சிரமங்களை தவிர்க்க இனி ஆன் லைனிலேயே இந்தப் பணிகளைச் செய்ய வலைதளம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அந்த அறிவிப்பில், ‘அரசு சேவைகள், தொழில் முனைவோருக்கு உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, உரிமம் வழங்கும் பணி இனிமேல் வலை தளம், அதாவது Web Portal மூலம் மேற்கொள்ளப்படும் என்பதையும்; தொழில் வழி பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விவரங்கள், கோட்பாடுகள் மற்றும் புதிய யுத்திகள் ஆகியவற்றையும் தொழிலாளர், தொழிற்சாலைகள் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் வலை தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவற்றை செயல்படுத்தும் வகையில், 2 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்திற்கென பிரத்யேக வலை தளம் உருவாக்கப்படும்.’ என்று தெரிவித்தார்.