சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரித் துறை வழக்கு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில், இந்த விவகாரத்தை வருமான வரித் துறையுடன் பேசி தீர்த்துக்கொள்வதற்காக மனுச் செய்யப்பட்டிருப்பதால், அந்த மனு மீது முடிவெடுக்கப்படும்வரை, இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார். வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா தரப்பினர் முறையீடு செய்திருப்பதாக வருமான வரித் துறையின் வழக்கறிஞர் தெரிவித்தார். ஆகவே, இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதற்கிடையில், வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்த மனு மீது என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமெனக் கோரி ஒரு மனுவை அவரது தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி என்ன?
ஜெயலலிதா 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996 ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்குப் பிறகு 93-94 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என சசிகலா மீதும் 1997ல் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. அதேபோல, 91-92, 92-93 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசஸும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல்செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை.
இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த ஜனவரி 30 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, இன்று விசாரணைக்கு வந்தது.