ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இருக்கிறது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்திற்காக, தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வது தொடர்பாக, சிபிஐ விசாரணை குழுவிற்கும், அதன் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்த வழக்கு தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால் அட்டர்னி ஜெனரல் தெரிவித்த கருத்து விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அவை கிடைத்தவுடன் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.