கட்ஜு எழுப்பியுள்ள நீதிபதி நியமன சர்ச்சை தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியது. இது தொடர்பாக அக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, ‘ஊழலும் காங்கிரஸும் மிகவும் நெருக்கமானவை என்பதை உணர்த்தும் இன்னொரு சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காகவும், சுய ஆதாயத்துக்காகவும் நீதித் துறையை முந்தைய மத்திய அரசு எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்பதை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமான நிகழ்வு மட்டுமன்றி, மிகவும் கவலை அளிக்கக் கூடிய பிரச்னையுமாகும். இந்த விவகாரத்தில், நடந்த உண்மையை எடுத்துரைக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் முன்வர வேண்டும்’ என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் சட்டத் துறை அமைச்சர் பரத்வாஜ்,‘மார்க்கண்டேய கட்ஜு குறிப்பிடுவது போல நீதித் துறையை யாரும் கட்டுப்படுத்தவில்லை. முந்தைய ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சில திமுக அமைச்சர்கள் விமான நிலையத்தில் சந்தித்ததாகவும், சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியை பணி நீட்டிப்பு செய்ய அவர்கள் நெருக்குதல் கொடுத்ததாகவும் கட்ஜு கூறுவதில் உண்மையில்லை.சர்ச்சைக்குள்ளான கூடுதல் நீதிபதிக்கு எதிராக, மத்திய உளவுத் துறை விசாரணை நிலுவையில் இருந்த காலத்தில்தான் அவருக்குப் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியக் கட்சியாக அப்போது திமுக இருந்தது. அக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் சில எம்.பி.க்களும் என்னைச் சந்தித்தனர். “கூடுதல் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விரும்பவில்லை; மேலும், அக் கூடுதல் நீதிபதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைத் தனிமைப்படுத்த கட்ஜு முயல்கிறார்’ என திமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.
‘நீதிபதி நியமன நடவடிக்கை என்பது குடும்ப விவகாரம் கிடையாது. அந்த வகையில், சட்ட அமைச்சர் என்ற அடிப்படையில் அலுவல்பூர்வமாக நான் லஹோதிக்கு எழுதிய கடிதத்தில்,
‘கூடுதல் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டேன். இந்த நிலையில், மத்திய உளவுத் துறையின் விசாரணை இறுதி அறிக்கையில், அந்தக் கூடுதல் நீதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், திமுகவைச் சேர்ந்த சில தலைவர்களுடன் அந்த நீதிபதி புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட தகவலை, உளவுத் துறை பதிவு செய்திருந்தது. ஆகவே, நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்ற பிறகு சென்னையில் இருந்து ஆந்திரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை’ என்றார் பரத்வாஜ்.