தமிழகத்தில் மணல் கடத்தலை தடுக்கும் அரசு அதிகாரிகள், காவலர்கள், மக்கள் அமைப்புகள், பொதுமக்கள் மீது மணல் மாஃபியா கும்பல் நடத்தும் கொலைவெறி தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. குறைந்தது மாதம் ஒரு கொலைவெறி தாக்குதல் சம்பவம் ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனால் அரசு நடவடிக்கை என்னவோ அறிக்கை அளவிலே முடங்கிப் போய்விடுகிறது. மாஃபியாக்கள் அரசியல்வாதிகளாகவோ, அரசியல்வாதிகளின் ஆசி பெற்றவர்களாகவோ இருப்பதுதான் இந்த பிரச்னை நீடிப்பதன் காரணம். தொடரும் இந்த மணல் மாஃபியாக்களின் வெறியாட்டத்தில் சமீபத்திய பலி, அரக்கோணம் தலைமைக் காவலர் கனகராஜ்.
சினிமாவில் நடப்பதுபோல கொலை
நேற்று அரக்கோணம் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய கும்பலைப் பிடிக்க முயன்றபோது தலைமைக் காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டிராக்டர் ஓட்டுநரான பேரூராட்சி தேமுதிக உறுப்பினரின் மகனை போலீஸார் தேடி வருகின்றனர். அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே குசஸ்தலை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் புரிசை கிராமம் அருகே சிலர் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தக்கோலம் போலீஸாருக்கு சனிக்கிழமை காலை 6.30 மணி அளவில் தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன், தலைமைக் காவலர் கனகராஜ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் அங்கு சென்றனர். அப்போது 6-க்கும் மேற்பட்டோர், ஒரு டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீஸாரை பார்த்ததும் அவர்கள் மணல் அள்ளும் உபகரணங்களை போட்டுவிட்டு ஓடிவிட்டனர். டிராக்டரை கிளப்ப ஓடிய ஓட்டுநரை, கனகராஜ் ஓடிச்சென்று பிடித்திருக்கிறார். அப்போது, டிராக்டரை ஓட்டுநர் கிளப்பியதால், அதன் சக்கரத்தில் கனகராஜ் சிக்கியிருக்கிறார். இதைக் கண்ட ஓட்டுநர், வேகமாக டிராக்டரை ஓட்டிச் சென்றதாக உடன் இருந்த உதவி ஆய்வாளர் ராஜன் தெரிவித்தார்.
கனகராஜ் அலறித் துடித்ததைக் கண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன், சப்தம் போட்டு அருகில் இருந்தவர்களை அழைத்து கனகராஜை கரைக்குத் தூக்கி வந்துள்ளார். ஆனால், அதற்குள் கனகராஜ் இறந்தார். காஞ்சிபுரத்தில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவர் இறந்து விட்டதை உறுதிசெய்துள்ளனர்.
காவேரிப்பாக்கம் அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜுக்கு, மனைவி முத்துகுமாரி (40) மட்டுமே உள்ளார். குழந்தை இல்லாததால் மேனகா (16) என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். அவர், தற்போது பிளஸ் 2 படித்து வருகிறார். கனகராஜை, டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் தேடப்படுபவர் சுரேஷ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரது தாய் செண்பகவள்ளி தக்கோலம் பேரூராட்சியின் 6-ஆவது வார்டு உறுப்பினராக உள்ளார். தந்தை தேவராஜ் தக்கோலம் நகர தேமுதிக பொருளாளராக உள்ளார். டிராக்டர் ஓட்டுநரை கைது செய்ய தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் அவர், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ஒரு சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது இருக்கட்டும், இதற்கு நிரந்தர தீர்வை காண்பதே மேலும் பல உயிர்கள் பலியாவதை தடுக்கும். சுற்றுச்சூழலும் காக்கப்படும்.!