தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக பொருளாலாரும் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் ஒரு பொது பிரச்னை குறித்து பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அது எனது ஆய்வில் உள்ளது என்றார். ஆனாலும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மு.க.ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு வழங்கும்படி கேட்டனர். ஆனால் பேச அனுமதி கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது,சமீபத்தில் வந்த புள்ளி விவரப்படி நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் அதிமாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை குற்றங்கள் 2013-ல் 7,475 என்றும், 2012-ம் ஆண்டில் 7,192 என்றும் தெரிவிக்கிறது. இதே போல 2013-ம் ஆண்டில் 992 பலாத்கார வழக்குகளும், 2012-ல் 737 சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முக்கியமான பிரச்னை என்பதால் இது குறித்து பேச முற்பட்டோம். அது மட்டுமல்ல. ஞாயிறன்று போலீஸ் ஏட்டு ஒருவர் மணல் கடத்தலை தடுத்த போது டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார். சமீபத்தில் மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது குறித்தும் பேச முடிவு செய்தோம். இது பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கேட்டு இருந்தோம். இது பற்றி பேச வாய்ப்பு கிடைக்காததால் வெளிநடப்பு செய்தோம்’ என்றார்.