தன்னுடைய ரசிகர் மன்றங்களை இசைஞானி பேன்ஸ் கிளப் என்ற அமைப்பின் மூலம் இணைத்திருக்கிறார் திரை இசையமைப்பாளர் இளையராஜா. இந்த கிளப்பின் முதல் நிகழ்ச்சி தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் பேசிய இளையராஜா, ‘ரசிகர்களுடனான முதல் சந்திப்பை நான் இங்கு வைத்துகொண்டதுக்கு காரணம், எனது தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்கள் இங்குதான் உள்ளன. ஆண்டுதோறும் எனது தாயார் இறந்த நாளில் மட்டும் இங்கு வருவேன். தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவேன். தற்போது ரசிகர்களான உங்களை சந்திக்க வந்துள்ளேன். இங்கு கூடிய இசைஞானி பேன்ஸ் கிளப் கூட்டத்தின் நோக்கம் இசையை வளர்ப்பது, ஆன்மீகத்தை காப்பது, சமூக சேவைகளை மக்களுக்கு செய்வது, மரக்கன்றுகள் நடுவதோடு, பொதுச் சேவையோடு, நாட்டை சுத்தமாக வைப்பதோடு, மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள், எனது பெயரில் என் அனுமதி இல்லாமல் இயங்கக்கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள், இசைஞானி பேன்ஸ் கிளப் என்ற அமைப்பில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதுபோல், ரசிகர்கள் 20 லட்சம் பேர் பதிவு செய்துள்ளீர்கள், நீங்கள் மட்டும் எனது பாடல்களை இணையதளத்தில் பதிவு இறக்கம் செய்யக்கூடாதென உறுதி மொழி எடுங்கள். நீங்கள் புதிய பாடல்கள் வேண்டுமென்று 20 லட்சம் பேர் பதிவு செய்தால், அடுத்தநாளே ஒரு ஆல்பம் வெளியிடவும், மேலும், வாரம் ஒரு ஆல்பம் வெளியிட என்னால் முடியும்’ என்றார்.