உத்தர பிரதேச மாநில மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பலாத்கார வழக்குகள் குறைவுதான் என்று சமாஜவாதி கட்சித் தலைவரும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முலாயமின் இந்தக் கருத்துக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு முன்பு பாலியல் பலாத்காரத்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து முலாயம் கூறும்போது, “இளைஞர்கள் சில நேரங்களில் தவறு செய்வது இயல்பான ஒன்றுதான். இதற்கு மரண தண்டனை தேவையில்லாதது” என்று தெரிவித்தார். அவரது இந்தக் கருத்தும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. முலாயம் சிங்க் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் உ.பி.யின் தற்போதைய முதல்வர் என்பது குறிப்பிடத்தகுந்தது.