வெறுப்பை காட்டும் சூழல் ஏற்பட்டபோதும் பெருந்தன்மையாக நடந்துகொண்டவர் காமராஜர். அதனாலே அவர் பெருந்தலைவர் ஆனார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இன்று பெருந்தலைவர் காமராஜரின் 112-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி திமுக தலைவர் விடுத்துள்ள செய்தியில்,
‘‘இந்தியாவில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டு, தலைவர்கள் எல்லாம் சிறையிலே வாடிய போது, சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி யடைகிறது என்பதையும், தனது தேசிய சகாக்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் என்பதையும் தாங்கிக் கொள்ள முடியாத காமராசர் உடல் நலிவுற்றுப் படுத்த படுக்கையானார்.
ஒரு நாள் காலை நானும் அன்றைய கல்வி அமைச்சர் நாவலரும் காமராஜர் அவர்களைக் காண அவரது இல்லம் சென்றோம். அவர் அருகே அமர்ந்த என்னைக் கண்டதும் அவரது கண்கள் கலங்கின. மெதுவாகத் தொட்டேன். தழுவிக் கொண்டார். அவரது கண்கள் நீர்வீழ்ச்சிகளாயின. ‘தேசம் போச்சு! தேசம் போச்சு’ என்று உரக்கக் கூவினார். நான் வாய்விட்டுக் கதறி அழுது விட்டேன். நாவலர் கண்ணீர் வடித்தவாறு எங்களிருவரையும் தேற்றினார். ‘அய்யா! நீங்கள் சொல்லுங்கள்! இப்போதே நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுகிறோம்! இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, சர்வாதிகாரத்தை அழிக்க நீங்கள் தலைமையேற்று அணி நடத்துங்கள்! உங்கள் பின்னால் நாங்கள் வரத் தயார்!’ என்றேன். “பொறுமையாக இருங்கள்! அவசரப்படாதீர்கள்! இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் ஜனநாயகம் இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும். கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள்” என்று அவர் அறிவுரை கூறினார்.
அப்படிப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 112வது பிறந்த நாள் விழாதான் இன்று! மறைந்த தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் யாராயினும் அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு கொள்கை வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் சிறப்புகளையும், சீலமிகு செயல்களையும், செயற்கரிய மக்கள் பணிகளையும், தியாகங்களையும், ஆற்றலையும், என்றைக்கும் நாம் மறந்ததில்லை; மறவாமல் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, காவேரிப் பிரச்னை, நெருக்கடி கால நிலை என்பன போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை நான் அணுகி அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய கருத்துக்களைத் தெரிந்துகொண்டு அவ்வாறே செயல்பட்டிருக்கிறேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்து நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவரே காமராஜர் அவர்கள்தான்.
மாற்றாரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாலை நேரப் பொதுக் கூட்டங்களில் பேசும்போது எப்படியெப்படியோ தாக்கிக் கொள்கிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி கோலோச்சிய பிறகு, தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தது. அதற்காக தி.மு. கழகத்திடம் வெறுப்பைக் காட்ட வேண்டிய பெருந்தலைவர் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. அதனால்தான் அவர் பெருந்தலைவர் ஆனார். அஃதே போல பேரறிஞர் அண்ணா அவர்களும், அவருக்குப் பின் நானும் பெருந்தலைவர் காமராஜரிடம் எந்த அளவுக்கு மரியாதை செலுத்தினோம், பழகினோம் என்பதை தமிழகம் நன்கறியும். அந்தப் பெருந்தலைவர் பிறந்த நாள் விழாவான இன்று அவருக்கு என் புகழாஞ்சலியைச் செலுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.