விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியின் தயரிப்பாளர் ஆன்டனி சினிமா தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். தனது மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் அழகு குட்டிச் செல்லம் படத்தை தயாரிக்கிறார் ஆன்டனி. சார்லஸ் இயக்குகிறார். அகில், கிரிஷா, சிம்பா, கருணாஸ், தம்பி ராமைய்யா, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், சுரேஷ், இனிது இனிது நாராயணன், எங்கேயும் எப்போதும் வினோதினி, பரதேசி ரித்விகா, மீரா கிருஷ்ணன், சேத்தன், தேஜஸ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் சார்லஸ் இந்தப் படத்தைப் பற்றி, ‘குழந்தைகள் மனித வாழ்வின் வரங்கள் அப்படீன்னு சொல்லலாம் . மனித இனத்தின் எதிர்கால நம்பிக்கைக் கனவுகள் அவர்கள். உலகத்தில் மனித இனம் செய்கிற பல செயல்கள், சொத்து வாங்குறதுல இருந்து கடைசி காலம் குறித்த நிம்மதி வரை குழந்தைகளை வைத்து தான் இருக்கிறது. குழந்தை இல்லாமல் ஏங்கும் தம்பதிகள், குழந்தையை வளர்க்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள், குழந்தை இருந்து அவற்றுக்கு நேரம் ஒதுக்காமல் வேலை வேலை என அலைபவர்கள், குழந்தைகளின் செயல்பாடுகளின் விளைவுகள் என்று எல்லாமே குழந்தைகளை மையமாக வைத்துதான் இயங்குகிறது. இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் படத்தில் சொல்கிறோம். கடைசியில் அவை எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் இணைத்து சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் படத்தை முடிக்கிறோம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது குழந்தைகளின் அழகிய பிரமாண்டம் இன்னும் நன்றாக எல்லோருக்கும் புரியும் ” என்கிறார் இயக்குனர்.
வேத் சங்கர் சுகவனம் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் திருவாசகத்தில் வரும் தாயே என்று துவங்கும் ஒரு பாடலுக்கு மெட்டமைத்து பயன்படுத்தி இருக்கிறார்களாம். படம் பற்றி பேசும் ஆன்டனி ‘நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் எவ்வளவோ கதைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். ஆனால் சார்லஸ் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது’ என்கிறார்.