சிறுதானியங்கள் உண்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் கிடைக்கும்’, ‘நீரிழிவு பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்’, ‘கொழுப்புச் சத்தைக் குறைக்கலாம்’, ‘மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்’, ‘கேன்சர் நோய் வராமல் தடுக்க முடியும்’ எப்படி? தானியங்களை சுழற்சி முறையில் உட்கொள்வதால்!
சிறுதானியங்களின் மகத்துவத்தை உணர்த்தும் அர்த்தம் பொதிந்த இந்த வாசகங்களை வெறுமனே அறிவுரையாக மட்டும் சொல்லிவிடாமல் நடைமுறைப்படுத்தி, நிரூபித்தும் வருகிறார் லட்சுமி. உடுமலைப் பேட்டையில் ‘ஆரோக்யம் – இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம்’ என்கிற சிறுதானிய உணவு விடுதியை நடத்தி வரும் இவர் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி! உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கிறது ‘ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம்’.
20 பேர் உட்கார்ந்து சாப்பிடக் கூடிய சிறிய உணவு விடுதி. சுவரெங்கும் சிறுதானியங்களின் முக்கியத்துவம், பயன், அவற்றிலுள்ள சத்துகள் அனைத்தும் வண்ண எழுத்துகளில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. உணவகத்துக்கு வரும் குழந்தைகள் விளையாட விளையாட்டுக் கருவிகள் ஒருபுறம், மற்றொருபுறம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் சிறுதானியங்கள், அவை தொடர்பான புத்தகங்கள் என அந்த இடமே வித்தியாசமான சூழலை ஏற்படுத்துகிறது.
கம்பு, ராகி, சோளம், வரகு, தினை, சாமை, குதிரைவாலி, மாப்பிளை சம்பா அரிசி, கருங்குருவை அரிசி , காட்டுயானம் அரிசி, சிகப்புக் கவுனி அரிசி, கருப்புக் கவுனி அரிசி போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், கார தோசை, குஸ்கா போன்றவை கிடைக்கிறது. தினம் ஒரு கீரை சூப், நெல்லிசாறு, இஞ்சிசாறு, ஆவாரம்பூ டீ போன்றவையும் கிடைக்கிறது .
இந்த உணவகத்தில் வெள்ளை சர்க்கரை, மைதா போன்றவற்றை உபயோகிப்பது இல்லை. தினை முறுக்கு, கம்புமுருக்கு, குதிரைவாலிமுருக்கு, சாமை முறுக்கு, வரகு காரசேவு, எள் உருண்டை, கடலை உருண்டை, ஜவ்வரிசி லட்டு போன்ற கார மற்றும் இனிப்பு வகைகளும் கிடைக்கின்றன.
இன்னொரு குறிப்பிடும்படியான தகவல் இங்கே பணிபுரிபவர்கள் அத்தனை பேரும் பெண்கள்!
உடுமலைப்பேட்டை சென்றால் நிச்சயம் ஒரு இந்த சிறு தானிய உணவகத்துக்கு சென்று சாப்பிட்டுப் பாருங்கள்.
முகவரி
ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் ,
31.பாபுகான் வீதி, உடுமலைப்பேட்டை ., திருப்பூர் மாவட்டம்.
செல்-9489324220.
சிறு தானியங்களின் பெருமை தெரிந்தவள் நான். வரகு தினை கம்பு சிவப்பரிசி போன்றவன்றை எங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்கிறோம் உடுமலைப் பேட்டை லட்சுமிக்கு எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நாட்டுக்கும் வீட்டுக்கும் மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் செய்யும் இந்த சேவை பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை