குறைந்தபட்ச பத்திரிகை அறத்தை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கையூட்டுச் செய்திகள் விவகாரத்தில் ஊடகங்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் கடந்த 2009இல் நடைபெற்ற அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவர் தனது தேர்தல் பிரசாரத்துக்கான சரியான செலவுக்கணக்கை சமர்ப்பிக்கத் தவறியதாகவும், மாநில செய்தித்தாள்களுக்கு அளித்த 25 விளம்பரங்களுக்கான செலவுக் கணக்கைக் குறிப்பிடவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வந்த வேளையில் வெளியிடப்பட்ட சில கட்டுரைகளைப் பார்க்கும்போது அவற்றை சாதாரணச் செய்திகளாகக் கருத முடியாது. அவை அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்டு அப்படியே அனைத்து நாளிதழ்களிலும் மற்ற செய்திகளோடு செய்தியாகக் கலந்து வெளியிடப்பட்டுள்ளது தெரிகிறது. எனவே, அசோக் சவான் தனது சரியான தேர்தல் செலவைச் சமர்ப்பிக்கத் தவறிய குற்றத்தை இழைத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நாளிதழ்கள் காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகள் என்று ஒப்புக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நாளிதழுக்கும் அல்லது ஊடக நிறுவனத்துக்கும் சொந்தமான சித்தாந்தத்தை வைத்திருக்க உரிமை உண்டு. ஆனால், அந்தச் சித்தாந்தமானது செய்திகள் மீது தாக்கம் செலுத்தாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கையூட்டுச் செய்திகள் விவகாரத்தில் ஊடகங்கள் அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நபர் ஒருவரைப் பாராட்டுவது போல் அமைந்த கட்டுரைகளை வெளியிடும்போது அதில் உள்ள கருத்துகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று வாசகர்களுக்கு உணர்த்தும் வாசகங்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் அது தொடர்பாக வாசகர் தன் மனதில் ஒரு முடிவுக்கு வர முடியும். இப்படி குறைந்தபட்ச பத்திரிகை அறத்தை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் எனத் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறியதால், எம்.பி. பதவியில் இருந்து அசோக் சவாணை ஏன் தகுதிநீக்கம் செய்யக் கூடாது? என்று கேட்டு அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸுக்கு, 20 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக வரும் 19ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் கூறி தேர்தல் ஆணையம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.