கிளப்களுக்கு வேட்டி அணிந்து செல்ல அனுமதி மறுப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரந்தாமன், மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தி ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்ததுதானாம். உயர்நீதிமன்ற நீதிபதியும் மூத்த வழக்குரைரும் அவமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் மட்டுமின்றி, ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், போட் கிளப், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிளப்களில் வேட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வேட்டி அணிந்து செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனுமதி கிடையாது. மனிதர்களை மதிக்காமல் அவர்களுடைய ஆடைகளுக்கு மதிப்பளிக்கும் மோசமான கலாசாரத்துக்கு இந்த அமைப்புகள் அடிமையாகி வருகின்றன.
தமிழர்களின் பாரம்பரிய ஆடைகள் தொடர்ந்து அவமதிக்கப்படும்போதிலும் அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. மேல்தட்டு மக்களுக்கான கிளப்கள் அரசின் எந்த சட்டதிட்டத்துக்கும் கட்டுப்படாமல், தங்களுக்கென தனியாக விதிகளை வகுத்துக் கொண்டு செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது. சங்கங்களின் பதிவுச் சட்டப்படிதான் இவை ஒழுங்குப்படுத்தப்படுகின்றன.
தமிழுக்கும், தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய ஆடைகளுக்கு மரியாதை அளிக்காத கிளப்களை தடை செய்யும் வகையில், அதற்குரிய சட்டங்களில் தமிழக அரசு உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்தக் கொடுமையை யாரிடம் சொல்லி அழ…