பட்ஜெட் 2014 -2015
பொது பட்ஜெட்டில் பெண்களுக்கென்று வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. நடுத்தர, ஏழை பெண்களோ, பணிபுரியும் பெண்களோ பயனடையும் வகையில் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேம்போக்கான, நிதி ஒதுக்கீடு செய்து கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சென்ற மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிர்பயா நிதி என்று 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக அந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை எந்தவகையில் அந்த நிதி பயன்படுத்தப்பட்டது என்பதற்கு சரியான தரவுகள் இல்லை. அந்த நிதி முடங்கிக் கிடப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. இந்நிலையில்தான் பாஜக அரசின் நிதி ஒதுக்கீடுகளும் அமைந்துள்ளன.
பொது போக்குவரத்துகளில் பெண்களுக்கு பாதுகாப்புக்கென ரூ 50 கோடி
பெரு நகரங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கென ரூ 150 கோடி
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால திட்டங்களுக்காக ரூ 100 கோடியில் பேட்டி பச்சோ, பேட்டி பதாவ் யோஜனா திட்டம்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான சலுகை வட்டி விகிதம் ஆண்டு ஒன்றுக்கு 4%. இந்த திட்டத்தை அகில இந்திய அளவில் மேலும் 100 மாவட்டங்களுக்கு நீட்டிப்பு
அஜீவிக்கா என்ற திட்டத்தின் கீழ், ஏனைய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்டங்களில் 7% வட்டிக்கு கடன்
முதற்கட்டமாக அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் குடிநீர் மற்றும் கழிப்பறைகள் கட்டத் திட்டம்.
தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் போல, பெண்கள் கல்விக்கும் திருமணத்திற்கும் பணம் சேமிக்க காப்பீடு வசதியுடன் கூடிய புதிய தேசிய சேமிப்புத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
விரைவில் பள்ளிக் கல்வியில் ஆண் பெண் சமத்துவம் பற்றிய தனி அத்தியாயம் அறிமுகப்படுத்த திட்டம்
நிர்பயா திட்ட நிதியில் இருந்து, புது தில்லியில் பெண்களின் பிரச்னைகள் தீர்க்க ஒரு கிரைசிஸ் மேனேஜ்மெண்ட் மையம் அமைக்கப்படும்