தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம் காலனியை சேர்ந்த கோபால் மகன் சங்கர் (35), சிவலிங்கம் மகன் அதியமான் (30), பாலிடெக்னிக் மாணவர் சி.சந்தோஷ் (19), எஸ்.சக்தி (38), மொ.துரை (47), கோ.அசோகன் (27) ஆகிய 6 பேர் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தாகவும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், இளவரசன் நினைவு தினத்தை ஒட்டி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்ததாகவும் கூறி, ஜூன் மாதம் 28-ஆம் தேதி இரவு போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில், சிறையில் உள்ள 6 பேரை அண்மையில் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து தருமபுரி மாவட்ட போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து, போலீஸ் விசாரணை முடிந்து அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், சிறையில் உள்ள 6 பேரையும் நேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.