நடுத்தர தர வர்க்கத்தைச் சார்ந்து நிற்கும் வகையில் சில திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்தான் இந்த பட்ஜெட்டில் உள்ளன என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘அடிப்படையில் இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. இதன் உள்நோக்கமே எல்லா துறையிலும் பொது-தனியார் கூட்டு (பிபிபி) முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். பாதுகாப்புத் துறை, காப்பீட்டுத் துறை ஆகியவற்றில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவித்திருப்பது நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும். பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறி இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலையை பலவீனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டால் ஒரு பயனும் இல்லை.’ என்று கருத்து கூறியிருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா
‘ரயில்வே பட்ஜெட்டை போன்றே மத்திய பொது பட்ஜெட்டும் பன்னாட்டு நிதியையும், பொது-தனியார் கூட்டை நம்பித்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் துண்டு விழுவது என்பது ரூ.14 லட்சத்து 767 கோடி நிகர வருவாய் இழப்பு ஆகும். இந்த இழப்பு எவ்வாறு சரிக்கட்டப்படும் என்பதற்கு பட்ஜெட்டில் விளக்கமில்லை. மறைமுக வரி 22 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதிகூட குறையலாம். வலதுசாரியை நோக்கி இந்திய பொருளாதாரம் சென்று கொண்டிருப்பதை பட்ஜெட் உணர்த்துகிறது. சோப்பு, எண்ணெய், உணவுப் பொருள்கள் போன்றவற்றுக்கான வரி குறைப்பு பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே உதவிடும். நடுத்தர தர வர்க்கத்தைச் சார்ந்து நிற்கும் வகையில் சில திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. பாமர மக்களுக்கு இந்த பட்ஜெட்டால் எவ்வித பயனும் இல்லை. வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த உத்தரவாதமும் பட்ஜெட்டில் இல்லை.’ இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் பேசியிருக்கிறார்.