எப்போது எதிரணியில் நிற்கும் அதிமுக செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய பட்ஜெட் விஷயத்தில் ஒரே அணியாக நிற்கின்றனர். மாற்றத்தை உண்டாக்கும் எவ்வித பொருளாதார அறிவிப்புகளும் இல்லாத இந்த பட்ஜெட்டை வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும். எல்லாம் ஊழல் வழக்குகளிலிருந்து மத்திய அரசின் தயவை நோக்கியே என்பதை மக்கள் அறிவார்கள் என்பதை இவர்கள் அறியவில்லை போலும். இதோ இந்த சந்தர்ப்பவாதிகளின் வாக்குமூலங்களை அறிக்கைகள் மூலமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
வளர்ச்சியைப் புனரமைத்தல், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை மேம்படுத்தல் ஆகிய சவால்களை எதிர்கொள்ள மத்தியில் உள்ள புதிய அரசு உண்மையான அக்கறையுடன் இருக்கிறது என்பதை பிரதிபலிப்பதாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. நிதி சிக்கனத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அதே சமயத்தில், புதிய அரசிடமிருந்து அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்ட சலுகைகளை நிறைவேற்றும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த தெளிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. செலவின நிர்வாக ஆணையம் அமைப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
ஏழை, எளிய மற்றும் நலிந்த பிரிவு மக்களுக்கு உணவு மற்றும் எரிபொருள், பாதுகாப்பு வழங்குவது தொடர்பான மாநிலங்களின் கருத்துகளை இந்த ஆணையத்தின் முன்பு வைக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திலும், நிதி சுதந்திரம் மற்றும் வருவாய் இழப்பை ஈடு செய்தல் ஆகியவற்றிலும், மாநிலங்களின் கவலைகளை களைய மிகவும் நியாயமாக நடந்து கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் உறுதி அளித்திருப்பது வரவேற்புக்குரியது. மத்திய அரசு விட்டுக்கொடுக்கும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரிக்கான சட்டத்தை இயற்ற வழி பிறக்கும்.
அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பது பற்றிய யோசனைகள் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டும். குறிப்பாக, அன்னிய நேரடி முதலீடு மூலம் அமைக்கப்படும் தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை இணையதளம் உள்ளிட்ட வழிமுறைகளில் சில்லரையாக விற்பனை செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நாட்டில் 100 நவீன நகரங்களை அமைக்கும் திட்டம் வரவேற்புக்குரியது. இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள பொன்னேரியை நவீன நகரமாக மேம்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. நகர்ப்புற மக்கள் மிக அதிகமாக வாழும் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், பெருமளவில் இதுபோன்ற நவீன நகரங்கள் அமைக்கப்பட வேண்டும். நவீன நகரங்களை உருவாக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.7 ஆயிரத்து 60 கோடியிலும், நகர்ப்புற மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதியான ரூ.50 ஆயிரம் கோடியிலும், தமிழ்நாட்டுக்கு உரிய பங்கினை பெற எதிர்பார்ப்புடன் உள்ளோம்.
சென்னை – பெங்களூரு, விசாகப்பட்டினம் – சென்னை தொழில் முனையப் பகுதிகள் உள்ளிட்ட தேசிய தொழில் முனையங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இதன் மூலம் அண்டை மாநிலங்களும் பயன்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாலும், தமிழகத்தில் உள்ள பல பின்தங்கிய பகுதிகளுக்கும், மாவட்டங்களுக்கும் எந்தப் பயனும் இருக்காது. எனவே இத்தகைய தொழில் முனைய இணைப்புகளை தமிழகத்துக்குள்ளும் விரிவுபடுத்த மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
விசாகப்பட்டினம் – சென்னை இடையிலான கிழக்கு கடற்கரை தொழில் முனையப் பகுதியை மேலும் தெற்கே நீட்டித்து, தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மதுரை-தூத்துக்குடி தொழில் முனையப் பகுதியை அதனுடன் இணைக்க வேண்டும். தமிழகத்தில் மாபெரும் ஜவுளி தொகுப்பு ஒன்றை அமைக்கும் திட்டத்தை வரவேற்கிறோம்.
இந்திய திறன் மேம்பாடு திட்டம் என்பதும், ஒரு முக்கிய துறையில் தக்க நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியாகும். இத்திட்டத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சியை மேம்படுத்த தமிழகம் முயற்சி மேற்கொள்ளும். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கான சிறப்பு திட்டமும் வரவேற்கத்தக்கது. தொழில் பயிற்சியாளர் சட்டத்தில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களையும் வரவேற்கிறோம்.
பார்வையற்றோருக்காக அறிவிக்கப்பட்ட ப்ரெய்லி அச்சகங்களில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்படும் என்று நம்புகிறோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், எனது யோசனைகள் ஏற்கப்பட்டதை வரவேற்கிறேன். மேலும், அதிகளவு ஃபுளூரைடு கொண்ட தண்ணீரை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழகத்தில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளை அமைக்க ஆதரவு தர வேண்டும்.
எனது கோரிக்கையை ஏற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் தேசிய முதியோர் மருத்துவ மையம் அமைக்க சாதகமான அறிவிப்பை வெளியிட்ட பிரதமருக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். தமிழகத்தில் உள்ளது போன்று, ரூ.500 கோடியில் தேசிய அளவில் விலை நிலைப்படுத்தும் நிதியத்தை ஏற்படுத்தும் அறிவிப்பை வரவேற்கிறேன். நிலக்கரி இணைப்புகளை வகைப்படுத்துவதற்கான அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் மிகப்பெரிய மின் திட்டங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைக்கும். மேலும், மிகப்பெரிய அளவிலான சூரிய சக்தி அமைப்பை தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கான அறிவிப்பு, மாநிலத்தின் சூரிய மின்சக்திக் கொள்கைக்கு ஏற்றதாக அமையும்.
காஞ்சிபுரம், வேளாங்கண்ணி போன்ற பாரம்பரிய இடங்களை மேம்படுத்தும் அறிவிப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேசமயம், காவல் துறை நவீனமயமாக்கலுக்காக நிதியை ஒதுக்கக் கோரும் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன், கடல்சார் காவல் நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோருகிறேன்.
தனிநபர் வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை
‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் நிதி நிலை அறிக்கை நிதி அமைச்சர் அருண்ஜெட்லியால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நாடெங்கும் உள்ள மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிதி நிலை அறிக்கை பொதுவாக வரவேற்கப்பட வேண்டிய பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சமாக உயரும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போது ரூ.2 லட்சம் உச்ச வரம்பாக இருப்பதை, வெறும் ரூ.50 ஆயிரம் மட்டுமே உயர்த்தி, தனி நபர் வருமான வரி விலக்கு பெற உச்ச வரம்பு ரூ. 2.5 லட்ச ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதியோருக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமங்களில் விவசாய விளைப்பொருள்களைச் சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க இந்த நிதி நிலை அறிக்கையில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். எதிர்பார்த்ததைப் போலவே சிகரெட் மீதான சுங்கவரி 11 சதவிகிதத்தில் இருந்து 72 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்பானங்களின் உற்பத்தி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.
குட்கா, பான்மசாலா ஆகியவற்றின் மீதான உற்பத்தி வரியும் 60 சதவிகிதத்திலிருந்து 70 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இவற்றின் விலை உயரும். வீட்டுக்கடனுக்கான வரிச் சலுகை ரூ.1ணீ லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒரு சலுகையாகும்.
தொலைக்காட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தும் “பிக்சர்டியூப்” மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைக்காட்சி பெட்டிகளின் விலை குறையும். அதைப் போலவே மின்னணு சாதனங்கள் மீதான வரிகள் குறைக்கப்படுவதால், கம்ப்யூட்டர்கள் விலையும் குறையலாம்.
திமுக சார்பில் மாநிலங்களவையில் பேசிய கனிமொழி, ‘நாடெங்கும் உழவர் சந்தை ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று நாடெங்கும் உழவர் சந்தை போல விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பதற்கான சந்தைகள் அமைக்கப்படும் என்றும், மாநில அரசுகள் அவ்வாறு உழவர் சந்தைகளை மேம்படுத்த ஊக்கம் தரப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும்.
ரூ.7,060 கோடி நிதியினை ஒதுக்கி புதிதாக 100 நகரங்களை உருவாக்கப் போவதாக நிதி நிலை அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டிருப்பது, கிராமங்களிலிருந்து நகர்ப் புறங்களுக்கு குடியேறும் மக்களுக்கு பேருதவியாக அமையும். தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கியிருப்பதும், புதிய தொழில் தொடங்குவோருக்கு உதவிட ரூ.10 ஆயிரம் கோடியில் நிதியம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதும், தொழில் பேட்டைகளை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், தமிழகத்தில் சோலார் திட்ட மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும்.
மேலும், இந்த நிதி நிலை அறிக்கையில் பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, நாடு முழுவதும் புதிய திட்டங்களைச் செயல்படுத்த இரண்டரை லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, நிலம் இல்லாத ரூ.5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடன் உதவி, கிராமங்களில் மின் வசதியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 சதவிகித வட்டியில் கடன் வசதி நீடிப்பு, ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, சென்னை மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் மற்றும் காச நோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும் என்பது போன்ற பல நல்ல அம்சங்கள் இந்த நிதி நிலை அறிக்கையிலே இடம் பெற்றுள்ளன. ஒட்டு மொத்தமாக மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அறிவிப்புகளே அதிகமாக உள்ளன” என்று வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.’