பிரபல நாடக கலைஞரும் நடிகையுமான ஸோரா ஷெகல் நேற்று மாரடைப்பால் உயிர் நீத்தார். அவருக்கு வயது 100. இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஸோரா, தன் இளம் வயதிலேயே பாரம்பரியமான பழக்கவழக்கங்களிலிருந்து வேறுபட்டு தன் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர். பட்டப்படிப்பு படித்தார், இங்கிலாந்து சென்று நடனம் கற்று உலக நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்தியாவுக்குத் திரும்பி புகழ்பெற்ற பிருத்வி தியேட்டர்ஸ் குழுவினருடன் பணியாற்றத் தொடங்கினார். தன்னைவிட 8 வயது இளையவரான அறிவியலாளர் காமேஸ்வர் ஷெகலை பலத்த எதிர்புகளிடையே திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கிரண் ஷெகல், பவன் ஷெகல் என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஸோராவின் வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார் கிரண் ஷெகல்.


நாடகக் கலைஞராக புகழ்பெற்ற இவரை சினிமாவும் பயன்படுத்திக் கொண்டது. பிருத்விராஜ் கபூரில் ஆரம்பித்து ரன்பீர் கபூர் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார் ஸோரா. சல்மான் கான், ஐஸ்வர்யா நடிப்பில் மெகா வெற்றி பெற்ற ஹம் தில் கே சுப்கே சனம் படத்தில் சல்மானின் பாட்டியாக நடித்திருக்கிறார். சில ஆங்கிலப் படங்களிலும் நடித்திருக்கிறார். தனது 90வது வயது வரை இவர் நடித்துக் கொண்டிருந்தார். இடதுசாரி நாடக இயக்கங்களில் பணியாற்றிய இவர், நாத்திகவாதியாக வாழ்ந்தவர்.
ஸோராவை கவுரவிக்கும் விதமாக சங்கீத நாடக அகடமி விருது, பதம் ஸ்ரீ, பத்ம பூஷன், பதம் விபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.