அரசியல், தமிழகம், தமிழ்நாடு

சாதி மோதல் உருவாக அரசே திட்டமிடுகிறது: உண்மை அறியும் குழு குற்றச்சாட்டு

0தருமபுரியில் இளவரசன் நினைவு தினத்தையொட்டி 8  இளைஞர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் அரசே சாதி மோதல் உருவாக திட்டமிடுகிறது என உண்மை அறியும் குழு குற்றம் சாட்டியிருக்கிறது.
இளவரசன் நினைவு தினத்தையொட்டி ஆயுதப் பயிற்சி எடுத்ததாகக் கூறி 8 பேர் கைது செய்யப்பட்டது குறித்து உண்மை அறியும் குழு சார்பில் சென்னையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ், வி.சீனிவாசன், பேராசிரியர். ஜி.கே.ராமசாமி, விநோத் ஆகியோர் இதுகுறித்து பேசினர்.
‘தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனியை சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆயுதப் போராட்ட அமைப்புகளில் இணைந்துள்ளதாகவும், இளவரசன் நினைவு நாளன்று அப்பகுதி வன்னியர் சாதியை சேர்ந்த சில முக்கியமானவர்களைக் கொலை செய்ய அவர்கள் சதி செய்வதாகவும் எனவே அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்தன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் இந்த கைது நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 7 பேர் கொண்ட உண்மையறியும் குழு ஜூலை 5 மற்றும் 8 ஆம் தேதிகளில் நத்தம் காலனி மக்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினோம். ‘துடி’ என்ற ஒரு அமைப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தலித் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது. வன்னியர் சாதித் தலைவர்களை கொல்ல திட்டமிட்டு ‘துடி’ அமைப்பு சில இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்ததாகக் கூறி 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரைக் காவல்துறை தேடி வருகிறது.
இந்த தகவல் அனைத்தும் முழுக்க முழுக்க திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யாகும். 8 இளைஞர்களும் ஜூன் 27 ஆம் தேதி மதியம் கைது செய்யப்பட்டு நள்ளிரவு வரை சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். இளவரசன் நினைவு தினமான 28 ஆம் தேதி காலை 5 மணியளவில் வன்னியர் சங்கத் தலைவரை கொலை செய்ய ஆயுதங்கள் கொண்டு சென்ற போது நாயக்கன் கொட்டாய்க்கு அருகேயுள்ள கந்தன் குட்டையில் கைது செய்ததாக காவல் துறை சொல்வது மிகவும் தவறான செய்தியாகும். பல மாதங்களாக ஆயுதப் பயிற்சி நடப்பதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். அப்படியானால் பல மாதம் கைது செய்யாமல் இளவரசன் நினைவு தினத்தன்று அவர்களை கைது செய்ய என்ன காரணம்? இதற்கு காவல்துறையும் அரசும் விளக்கமளிக்க வேண்டும்.
இளவரசன், திவ்யா பிரச்சனையில் தலித் மற்றும் வன்னியர் பிரிவு மக்கள் தனித் தனியாக இருக்கும் நிலையில் அரசு இந்த இரண்டு பிரிவு மக்களை ஒன்று சேர்க்கும் பணியை செய்யாமல் அவர்களுக்குள் மேலும் மோதல்களை உருவாக்கத் திட்டமிடுகிறது. பரமக்குடி, நாயக்கன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் தலித் மக்களைக் குற்றம்சாட்டும் பணியிலே அரசு தொடர்ந்து இரட்டை வேடமிட்டு செயல்பட்டுவருகிறது. எனவே கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும், நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனிப் பகுதியில் சமூக ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநாட்ட அப்பகுதியைச் சேர்ந்த சாதி, மத சார்பற்ற அரசியல்வாதிகள், தொழிற்சங்கத்தினர், வர்த்தகர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் அடங்கிய ஒரு அமைதி குழுவை அரசு அமைக்க வேண்டும்; தருமபுரி மாவட்ட காவல்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்’ என்று உண்மை அறியும் குழுவினர் கூறினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.