நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக வழக்குப் போட்டு பாஜக அரசு பழிவாங்குவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். சமீபத்தில் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது டெல்லி நீதிமன்றம். இந்த வழக்கை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அமலாக்கப் பிரிவிடமும் சுப்பிரமணியசுவாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் ஆதரவு செய்திகளை வெளியிடுவதற்காக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. நிர்வாகச் செலவுகளுக்காகவும், நஷ்டத்தை தவிர்க்கவும் அந்தப் பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சிக்கு வந்த நன்கொடையில் இருந்து ரூ.90 கோடி அளிக்கப்பட்டது. கடனை அடைத்ததற்குப் பிரதிபலனாக நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை யங் இந்தியன் என்ற நிறுவனத்தின் வாயிலாக சோனியா, ராகுல் உள்ளிட்டோர் அபகரித்தனர் என்று சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக 2011-ஆம் ஆண்டில் தில்லி நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். அதில், சோனியா, ராகுலின் செயலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் ஃபெர்ணான்டஸ், மத்தியில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமரின் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றிய சாம் பிட்ரோடா, மூத்த பத்திரிகையாளர் சுமன் துபே ஆகியோர் உடந்தையாக இருந்ததாக சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறியிருந்தார்.
நாங்கள் மீண்டெழுவோம்
இந்த வழக்கு குறித்து என்டிடீவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ’புதிதாக பதவியேற்றிருக்கும் பாஜக அரசு எங்களாஇ பழிவாங்கும் விதமாக இப்படி நடந்து கொள்கிறது. இது எங்களை விரைவில் மீண்டெழுவதற்கான உத்வேகத்தை அளிக்குமே தவிர, சோர்வைத் தறாது’ என்று பேசியிருக்கிறார்.