‘தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ரயில்வே பட்ஜெட் பற்றி பலபட புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். அது ரயில்வே பட்ஜெட்டுக்காக என்பதை விட, வருமான வரி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகள் வரவிருப்பதையொட்டிய பாராட்டாக இருக்கலாம் என்று யாரும் எண்ணிடக் கூடாது’ என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
ரயில்வே பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:,
‘ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே 8000 கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை; “கடந்த கால அரசின் முடிவு அது” என்று கூறி அறிவித்துவிட்டார்கள். அதனால் இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ரயில்வே பட்ஜெட் பற்றி கூற எதுவுமில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் என்றும், அது தவிர ஐதராபாத்துக்கும், பெங்களூருக்கும் சென்னையிலிருந்து அதிவேக ரயில்கள் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதாகும். ஆனால் கடந்த ஆண்டு படிக்கப்பட்ட மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒன்பது புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டது.
துப்புரவு பணியை தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியிருப்பதும், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க விரும்புவதாகக் கூறியிருப்பரும் வரவேற்கத்தக்கது அல்ல. ரயில்வே பாதுகாப்புப் பணியில் 17 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதும், அதில் 4 ஆயிரம் பேர் பெண் போலீஸ் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதும் வரவேற்கக் கூடியதாகும்.’