முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அறிக்கைவிட்டு உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா என திமுக தலைவர் கருணாநிதிக்கு பதில் அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது செயலற்ற முதலமைச்சராக விளங்கிய தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் எனது தலைமையிலான அரசைப் பார்த்து, “இனி என்ன செய்யப் போகிறது இந்த அரசு” என்ற தலைப்பிலே முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது கேலிக்கூத்தானது.
திரு. கருணாநிதி தனது அறிக்கையில், தேசியப் பேரணைகள் பதிவேட்டில் இடம் பெற்றுள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, மற்றும் பெருவாரிப்பள்ளம் குறித்து விவரம் புரியாமல் நீட்டிமுழக்கி இருக்கிறார். அதற்கான விரிவான பதிலை நான் 7.7.2014 அன்று வெளியிட்டுள்ளேன் என்பதை திரு. கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கருணாநிதி மேலும் தனது ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை விவரங்களை வெளியிட்டு, தனக்குத் தானே பாராட்டுப் பத்திரம் வழங்கி கொண்டுள்ளார். அதே சமயத்தில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரளாவுக்கு சாதகமாக அப்போதைய மத்திய அரசு நடந்து கொண்ட போது, அப்போதைய மத்திய அரசையோ அல்லது கேரள அரசையோ கண்டிக்கக் கூட திராணியில்லாமல் மூலையில் முடங்கிக் கிடந்ததையும்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்திய பிறகு தான் வல்லுநர் குழுவில் தமிழ்நாடு சார்பில் நீதிபதி நியமிக்கப்பட்டதையும் அறிக்கையில் குறிப்பிட மறந்துவிட்டார், இல்லை மறைத்துவிட்டார் திரு. கருணாநிதி.
அடுத்தபடியாக, திரு. கருணாநிதி தனது அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியது. அந்தத் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 1 ஆம் தேதி கண்காணிப்புக் குழுவை நியமித்தது. அந்தக் குழு செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன்பாகவே, கேரளத்தின் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு அனுமதிக்கவும், அதன் மீது முடிவெடுக்கும் வரை கண்காணிப்புக் குழுவின் செயல்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்திடம் கேரள அரசு கேட்டுள்ளது”” என்று கூறியிருக்கிறார். இது குறித்த உண்மை நிலையை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழகத்திற்குரிய நியாயமான தீர்ப்பினை 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியவுடன், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் 30.6.2014 அன்று மறு ஆய்வு மனுவினை தாக்கல் செய்ததும், இந்த மனுவில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் 7.5.2014 அன்று பிறப்பித்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை மட்டும் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில், 7.5.2014 பிறப்பித்த உச்ச நீதிமன்ற ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கேரள அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. மத்திய நீர்வளக் குழுமத்தின் பிரதிநிதி, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் மேற்பார்வையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப, 1.7.2014 அன்று மேற்பார்வைக் குழுவினை நியமித்து மத்திய நீராதார அமைச்சகம் ஆணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கப் பெற்றவுடன், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஏதுவாக, மேற்பார்வைக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மேற்பார்வைக் குழுவின் தலைவர் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்தின் பிரதிநிதியை 3.7.2014 அன்றே கடிதம் மூலம் கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில், 8.7.2014 அன்று திருவனந்தபுரத்தில் மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. அடுத்தக் கூட்டம் 17.7.2014 அன்று நடைபெற உள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுவினை உச்ச நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்து தீர்ப்பு வழங்கும் வரையில், உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தினை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென கேரள அரசு இது வரையில் எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. அவ்வாறான நிலையில் இது போன்ற ஒரு மனுவினை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள அரசை தூண்டும் விதமாக திரு. கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளதை தமிழக மக்கள்
மன்னிக்க மாட்டார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் இழைத்த துரோகம் போதாது என்று, தற்போதும் இது போன்று தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார் திரு. கருணாநிதி. தமிழக மக்களுக்கு எதிரான இது போன்ற நடவடிக்கையை திரு. கருணாநிதி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வெகு விரைவில் முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தப்பட்டு, எனது தலைமையிலான அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதற்காக இது போன்று தமிழக விவசாயிகளுக்கு எதிராக திரு. கருணாநிதி செயல்படுவதை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் அரிஷ் சால்வே உள்ளிட்டவர்களோடு கேரள முதலமைச்சர் ஆலோசனை நடத்தி இருக்கிறார் என்றும், சீராய்வு மனுவில் உச்ச நீதிமன்றம் தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம் என்று கேரள முதல்வரே டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார் என்றும், இது பற்றி எல்லாம் கவலைப்படவோ, ஆலோசிக்கவோ தமிழகத்திலே ஓர் அரசு இருக்கிறதா? என்று வினவியிருக்கிறார் திரு. கருணாநிதி.
தமிழகத்திலே திறம்பட செயல்படும் அரசு இருப்பதால் தான், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கப் பெற்றது; மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது; மேற்பார்வைக் குழுக் கூட்டத்திற்கான நாளும் குறிக்கப்பட்டுவிட்டது; விரைவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக நிச்சயம் உயர்த்தப்படும் என்பதை திரு. கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிகைகளில் வெளி வரும் கட்டுரைகள் மற்றும் பல்வேறு தலைவர்கள் கூறுவதை எல்லாம் தொகுத்து, அவற்றின் உண்மை நிலையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், முரசொலி
நாளிதழை எப்படியாவது நிரப்ப வேண்டும் என்ற நோக்கில், சிண்டு முடியும் பணியில் இனி மேலாவது ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதோடு, “உண்ட வீட்டுக்கு இரண்டகம்
செய்யலாமா” என்ற பழமொழியை திரு. கருணாநிதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.