கடந்த வாரம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பிரபல தொலைக்காட்சி நெட் ஒர்க்கான டிவி18 நிறுவனத்தை 4 ஆயிரம் கோடிக்கு வாங்கியது. இதில் சிஎன்என் ஐபிஎன், இஸ்ட்ரி சேனல், ஐபிஎன் 7, ஃப்ர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் உள்ளிட்ட ஊடகங்கள் அடங்கும். இந்நிலையில் இந்த ஊடகங்களில் பணியாற்றிய பலர் வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். அவர்களில் சிஎன்என் ஐபிஎன்’னின் பிரபல தொகுப்பாளர்களான ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஷ் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இது குறித்து, தங்களுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
‘கடந்த 9 ஆண்டுகளாக என்னுடைய வாழ்வின் அங்கமாகவே சிஎன்என் ஐபிஎன் ஆகிவிட்டது. இக்கட்டான நேரங்களில் இணைந்து ஒரு குழுவாக பணியாற்றினோம். நாம் பத்திரிகையாளர்களாக முன்நின்றோம். அதற்கான பலனையும் பெற்றோம். பொறுப்புணர்வோடும் அதே சமயம் சுதந்திரமாகவும் செயல்பட்டோம். மிகப் பெரிய வெற்றியை அடைந்தோம். லட்சணக்கானவர்களின் வாழ்க்கையைத் தொட்ட மாயாஜாலத்தை உருவாக்கினோம். அது எப்போதும் நிலைதிருக்கும்’ என்று உணர்வுப்பூர்வமாக கடிதம் எழுதியிருக்கிறார் சகரிகா. இந்தியா டுடே பத்திரிகையில் பணிபுரியப்போவதாக தெரிவித்திருக்கிறார் இவர்.
‘சிஎன் என் ஐபிஎன் ஒரு மேஜை, ஒரு நாற்காலியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்னொரு செய்தி தொலைக்காட்சி தேவையா என்று கூட கேட்டார்கள். ஆனால் எது நடந்தாலும் நடக்கட்டும் என நாம் உறுதியாக இருந்தோம். இந்த 9 வருடங்களில் நாம் தொழில் ரீதியாகவும் வெற்றி பெற்றோம். அதோடு, நாம் பத்திரிகை அறத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை. அறத்தோடு இயங்கும் பத்திரிகைகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அதை நாம் செய்தோம். நாங்கள் வெளிக்கொண்டு வந்த விவகாரங்களால் அமைச்சர்கள் பதிவி விலகினார்கள், நிலமில்லாதவர்கள் நிலம் பெற்றார்கள். மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப் பட்டார்கள். இதேபோல் அடுத்து வந்திருக்கும் நிர்வாகமும் பத்திரிகை அறத்துக்கு முக்கியத்துவம் தரும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று ராஜ்தீப் தன்னுடைய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய பத்திரிகையாளர் அனுபவத்தை புத்தகமாக எழுதப்போவதாக சொல்கிறார் ராஜ்தீப் சர்தேசாய்.
தேர்தலில்போது மோடிக்கு ஆதரவாக செய்தி வெளியிட வற்புறுத்தப்பட்டதாகவும் அதில் முரண்பட்ட கணவன், மனைவி இருவரும் பதவி விலகியதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.