தாயின் சாதியை வைத்து அவருடைய குழந்தைக்கு சாதி சான்றிதழ் வழங்க அறிவுறுத்தியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். பாலியல் அத்துமீறல் மூலம் பிறந்த 9 வயதான குழந்தை தன் தாயின் சாதியை வைத்து தனக்கு சாதி சான்றிதழ் தர வலியுறுத்தி கடந்த 2012 ஆம் ஆண்டு தன் தாய் மூலமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். ஜெயச்சந்திரன், நீதிபதி எம். வேண்கோபால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு, அவருடைய தாயின் ஆதி திராவிடர் பிரிவு சான்றிதழையே வழங்க புதுச்சேரி அரசு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அந்தக் குழந்தையின் தாய், புதுச்சேரி ஏனாம் பகுதியில் வசித்தபோது ஒருவனால் ஏமாற்றப்பட்டு குழந்தையை பெற்றார். உயர்சாதியைச் சேர்ந்த அந்த நபர், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்திருக்கிறார். காவல் நிலையம் சென்ற அந்தப் பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரத்தை அரசாங்கம் வழங்கியிருக்கிறார். அந்த நபர் சிறிய அளவிலான தண்டனையே பெற்றிருக்கிறார். இந்நிலையில் ரிக்ஷா தொழிலாளியின் மகளான அந்தப் பெண், குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக சாதி சான்றிதழ் கேட்டு அரசு நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருக்கிறார். தந்தையின் சாதியை ஒட்டிய குழந்தைகளுக்கும் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என காரணம் காட்டி சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே நீதிமன்றத்தை நாடி தங்களுக்கான நீதியைப் பெற்றிருக்கிறார்கள் இந்தத் தாயும் சேயும்.