விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை என்றும் உடனே அதை வழங்கவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ’ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்க கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் அரசு கேபிள் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால், 24 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்களும், 65 லட்சம் சந்தாதாரர்களும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், முந்தைய மத்திய அரசு கேபிள் டி.வி. ஒழுங்குமுறைச் சட்டத்தில் செய்த திருத்தம் காரணமாக, ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் ஒளிபரப்பு வழங்க டிஜிட்டல் உரிமம் அவசியம் என்ற கட்டாயம் உருவானது. எனவே, இதனைப் பெற தமிழக அரசு 2012-ம் ஆண்டு டிஜிட்டல் உரிமம் கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பித்தது. ஆனால், தற்போது வரை அதற்கான உரிமம் வழங்கப்படவில்லை .
தமிழக அரசு விண்ணப்பித்ததற்குப் பின்னர், உரிமம் கோரியவர்களுக்கு, அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கவே, தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்காமல் முந்தைய காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தி வந்தது. எனவே, ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்க, தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விரைவில் டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்’ என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.