மக்களவையில் வரும் 8 ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டையும், வரும் 10 தேதி , பொது பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரைச் சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இன்று கூட்டினார்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு , காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக் ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், அதிமுக எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தரவேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார். அப்போது, விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு, மீனவர் பிரச்னை ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.