மத்திய அரசால் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட விலையேற்றங்களால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே செல்கிறது. எல்லா தரப்பு மக்களையும் பாதித்திருக்கும் இந்த விலையேற்றத்தை குறைக்க அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் வெப்பச் சலனம் ஏற்பட்டதை அடுத்து வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை அக்டோபர் மாதத்தில் ரூ. 100ஐ எட்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் மொத்த விலை வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் மொத்த விலையில்வெங்காயத்தின் விலை 18 ரூபாயாக உள்ள நிலையில், சில்லரை விற்பனையில் ரூ.36 லிருந்து 40 க்கு விற்கப்படுகிறது. வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மொத்த விலைக்கும் சில்லரை விற்பனை விலைக்கும் இடையேயான வித்தியாசத்தை கண்காணிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ள நிலையிலும் விலை வேறுபாடு குறைந்தபாடில்லை.
வெங்காயம் மற்றும் உருளைகிழங்கின் விலை உயர்வை தடுக்க அவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதோடு, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பதுக்கலைத் தடுக்க, அவற்றை வியாபாரிகள் இருப்பு வைத்துக் கொள்வதற்கு உச்சவரம்பை நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பெட்ரோல்-டீசல் விலையுயர்வை காரணம் காட்டி பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளின் விலை கிட்டத்தட்ட ரூ 100க்கு விற்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது.