வெளியூரில் குறிப்பாக மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் பெருநகரங்களில் தங்கி பணிக்குச் செல்லும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான ஹாஸ்டல்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு அரசு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – பெரம்பூர், வியாசர்பாடி, பள்ளிக்கரணை, சேலையூர் ஆகிய இடங்களில் 6 அரசு விடுதிகள்; காஞ்சிபுரம் மாவட்டம் – ஒக்கியம்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் 3 அரசு விடுதிகள்; விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு அரசு விடுதி, என மொத்தம் 12 பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அரசு விடுதிகளில் தங்குவதற்கு மாத வாடகையாக சென்னையில் 300 ரூபாய், மாநிலத்தின் பிற இடங்களில் 200 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் சேர்வதற்கு தகுதியான மாத வருமான உச்ச வரம்பு சென்னைக்கு 25 ஆயிரம் ரூபாய் எனவும், மாநிலத்தின் பிற இடங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் உணவுக் கட்டணம், மின்கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்றவை விடுதியில் தங்கும் பெண்களால் பகிர்ந்து கொள்ளப்படும். விடுதிப் பணியாளர்களுக்கான ஊதியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
பணிபுரியும் பெண்களுக்கான அரசு விடுதிகளில் விசாலமான தங்கும் அறைகளுடன் வரவேற்பறை, துயில் கூடம், சமையல் அறை, வைப்பறை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை, குளியல் அறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வாடகை கட்டிடங்களில் துவக்கி வைக்கப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான இந்த அரசு விடுதிகள், விரைவில் சொந்த கட்டடங்களில் செயல்பட 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சூழலுள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், குழந்தைத் திருமணங்களிலிருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தைகளைப் பாதுகாத்து அவர்கள் கல்வியை தொடர வழிவகை செய்யும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை இல்லத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்தச் சேவை இல்லத்தில் குழந்தைத் திருமணங்களிலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகள் தவிர ஆதரவற்ற வளரிளம் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் தங்கலாம். இங்கு தங்கிப் பயன் பெறும் பெண்களுக்கு தங்குமிடம், உணவு, உடை, சுகாதாரம், மருத்துவ வசதி, பாதியில் படிப்பினை நிறுத்தியவர்களுக்கு தொடர்ந்து படிக்க வசதிகள், உயர் கல்வி பெறுவதற்கான நிதியுதவி மற்றும் தொழிற் பயிற்சி ஆகியவை வழங்கப்படும் என்று அரசு செய்திக்குறிப்பு சொல்கிறது.